மத்திய வங்கி ஆளுனரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகள் சந்திப்பு!

Monday, September 7th, 2020

வடமாகாணத்திற்கு விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் லக்ஷமன் அவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட பிரதிநிதிகள் இன்று (07.09.2020) யாழ்ப்பாணத்தில் சந்தித்து வடமாகாணத்தில் கடன்களைப் பெற்று விவசாயம் கடற்றொழில் மற்றும் சிறு உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட பிரதிநிதிகளாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கௌரவ அமைச்சரின் ஆலோசகர் தவராசா கௌரவ அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா கௌரவ அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்த அக்கலந்துரையாடலில் யுத்தத்தின் பின்னரான சூழலில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடும் எதிர்பார்ப்போடு நுண்கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகின்ற அவலம் தொடர்பாகவும் அத்தகையவர்களுக்கு நுண்கடன்களிலிருந்து மீள்வதற்கான வழிவகைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அக்குழுவினர் வலியுறுத்தினர்.

மேலும் விவசாயம் கடற்றொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு விரும்புகின்றவர்களுக்கு அரசாங்கம் பல்வேறுவிதமான கடன் திட்டங்களை அவ்வப்போது அறிவித்தாலும்> அக்கடன்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதையும் மக்கள் நலனை முன்னிறுத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் அந்த நோக்கத்தை அடையாமல் போகின்ற துரதிஷ்டத்தை போக்க வங்கிகளில் இலகுவான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அத்துடன் கடந்த காலத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் கடன்களைப் பெற்று தொழில் முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் பலர் தொழில் பாதிக்கப்பட்டு கடன்களை மீளச் செலுத்த முடியாமல் வங்கிகளால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கறுப்புப் பட்டியலில் இருப்போரில் தொழில் முயற்சியில் ஆர்வம் உள்ளவர்களை பரிகார அடிப்படையில் மீண்டும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து ஊக்குவிப்பதற்கும் மத்திய வங்கியினால் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்றும் விஷேட குழு பிரதிநிதிகள் மத்திய வங்கி ஆளுனரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மத்திய வங்கி ஆளுனர்> வடக்கில் கடன்களை பெறுவதிலும் நுண்கடன்களைப் பெற்றுக்கொள்கின்றவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளையும் ஆராய்ந்து பயனாளிகளுக்கு பொருத்தமான தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: