மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 3rd, 2018

மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை என்னும் நோக்கில், மனிதர்களைப் புத்திஜீவிகளாக உருவாக்குகின்ற உலகக் கல்வியோடு, அந்த மனிதர்களை மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால் பூரணத்துவமாக்குகின்ற அறநெறிக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, மனிதர்களது எதிர்கால வாழ்வு நன்னெறி கொண்டதாக அமைய வழி செய்கின்ற வகையில் அறநெறிப் பாடசாலைகள் செயற்படுகின்றன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்துகின்ற ‘தேசிய சேவை மேன்மை விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மனிதன் தன் வாழ்வில் எந்தெந்த வழிகளில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது சாத்தியமானதொரு வாழ்க்கை முறைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக அமைகின்றது.

ஒழுக்கத்திலும், ஆன்மீகச் சிந்தனையிலும் வெற்றி பெறக்கூடியவர்கள் எல்லா நிலைகளிலும் நிறைவு பெற்றவராக இருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.  இவ்வகையான ஆளுமைத்தன்மையை மனிதருக்குள் ஏற்படுத்துவதில் அறநெறிக் கல்விக்கே அதிக பங்களிப்பு உண்டு.

அந்த வகையில், தன்னலமற்ற நீண்டதோர் சீரிய சமூகப் பார்வையோடு இந்தச் சேவைக்காகத் தம்மை முழு மனதோடு அர்ப்பணித்து, எதிர்காலச் சமூகத்தில் எமது சந்ததியினர் அப்பழுக்கற்ற பிரஜைகளாக வாழ வேண்டும் என்ற தார்மீகச் சிந்தனையோடு,  ‘இளம் இந்துச் சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலரச்செய்து, அவர்களின் ஆளுமையையும் திறமைகளையும் மலர்ந்து விரிவடைய வைக்கும் உன்னத இலட்சியம் கொண்ட’ அறநெறிக் கல்வியினைப் போதிக்கும், அறநெறி பாடசாலை ஆசிரியர்களையும,; அவர்தம் சேவை மனப்பாங்கினையும் பாராட்டி இந்த விருது வழங்கும் வைபவம் இன்று இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

உன்னதமான கடமையினை நிறைவேற்றுகின்ற வாய்ப்பினை இந்த சமூகம் தங்களிடம் ஒப்படைத்திருப்பதான உறுதியான நம்பிக்கையுடனும், சிறுவர்களையும், வளர் இளம் பருவத்தினரையும் வழிநடத்த அர்ப்பணிப்புடனும் இந்துசமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் செயற்பட்டு வருவதால்,  அவர்களது தன்னலம் கருதாத சேவைக்கான ஒரு கௌரவப்படுத்தலாகவே நான் இந்த  ‘தேசிய சேவை மேன்மை விருதினைக்” கருதுகின்றேன்.

மனதில் சுயநலமற்று, செயலில் தூய்மையுடன் உன்னதமாக சேவையாற்றுகின்ற ஒவ்வொரு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்புகளுக்கான பயன் நிச்சயம் கிட்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.

அந்த வகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசியர்களுக்கான இந்த கௌரவமானது பாராட்டத்தக்க முயற்சியாகும். இத்தகைய முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்பதுடன், இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பில் இன்னும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, அரச அனுசரணையுடன் செயற்படுத்தப்படல் வேண்டும் என்கின்ற எனது நீண்ட கால எதிர்ப்பார்ப்பினை நான் கூடிய விரைவில் செயற்படுத்துவேன் என்ற உறுதியையும் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புவதுடன், உங்களது பணிகள் மேலும் சிறப்புடன் தொடர எனது நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2000ஆம் ஆண்டிலும், பின்னர் 2004ஆம் ஆண்டிலும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, ஏனைய சில அமைச்சுகளுடன் இணைத்து என்னிடம் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில், குறிப்பாக அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தப் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் இல்லாதிருந்த சூழ்நிலையிலும், நாடளாவிய ரீதியில் பெரும்பாலான இந்து சமய கோவில்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களுக்கு பாரிய உதவிகளை என்னால் மேற்கொள்ள இயலுமாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் மட்டக்களப்பு விபுலானந்தர் அழகியற் கற்கைகள் கல்லூரியை என்னால் ஸ்தாபிப்பதற்கும் இயலுமாகியது. அந்த வகையில் மீண்டும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய நாகரிக்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், அதனை மேலும் வளர்த்தெடுக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு எண்ணியுள்ளேன்.

அந்த வகையில், இந்து சமய கற்கை நெறிகளுக்கான பீடமொன்றினை பொருத்தமான இலங்கைப் பல்கலைகழகமொன்றில் நிறுவதற்கான முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றேன் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இம்முறை இந்து சமய அலுவல்கள் அமைச்சினை நான் பொறுப்பேற்றவுடன், ஐயப்ப பக்தர்களின் சபரிமலைக்கான புனித யாத்திரையை அரச அனுமதி பெற்ற புனித யாத்திரையாக அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, அதனைப் பிரகடனப்படுத்துவதற்கான வழிவகைகளை செய்திருக்கின்றேன்.

இதன் மூலமாக ஐயப்ப பக்தர்கள் தங்களது விரத காலங்களில் அரச மற்றும் தனியார் தொழில் நிலையங்களில் வசதி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும், புனித யாத்திரையினை மேற்கொள்கின்றபோது, இலகுவானதும், குறைந்த செலவீனங்களைக் கொண்டதுமான போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளாவிய ரீதியில் அமையப் பெற்றுள்ள 25 ஐயப்ப ஆலயங்களுக்கு முதற்கட்டமாக ஒரு தொகை நிதியினை இந்த வருடத்திற்குள் வழங்குவதற்குரிய சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றேன்.

அத்துடன், நாட்டின் தொன்மைவாய்;ந்த இந்து சமய வணக்க வழிபாட்டுத் தலங்களையும், அவை சார்ந்த பகுதிகளையும் புனித நகரங்களாக அரசப் பிரகடனங்கள் பெற்று, அபிவிருத்தி பெறுவதற்கான திட்டங்களை தற்போது முன்னெடுத்துள்ளேன். அந்த வகையில், திருக்கேதீஸ்லரம், திருக் கோணேஸ்வரம், நகுலேஸ்லரம், மாவிட்டபுரம் கந்தசுவாதி கோவில், முறிகண்டி பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்கள் முதற்கட்டமாக இனங்காணப்பட்டுள்ளன.

அத்துடன், வடக்கு – கிழுக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகள் வசமிருக்கின்ற இந்து ஆலயங்களையும், வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்து ஆலயங்களையும் மீட்டு, அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.

அதேபோன்று, பாடசாலை மாணவர்களுக்கான இந்து சமய பாட நூல்களில் பல்வேறு குறைபாடுகள், தேவைகள் இருப்பது குறித்து கடந்த காலங்களில் இந்து சமய விற்பன்னர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், இந்து சமய அமைப்பினர்களால் என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக, சொற் பிழைகள், பொருள் பிழைகள், எழுத்துப் பிழைகள், கனதியானதும், நீளமானதுமான பாடங்கள், தேவையற்ற பாடங்கள் என பல்வேறு குறைபாடுகள் என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் அவதானத்தைச் செலுத்தியபோது, இந்து சமய பாட நூல்கள் இதே நிலையினைக் கொண்டிருந்தால், எமது மாணவர்கள் நாளடைவில் இந்து சமய கற்கைகளை கைவிட்டு விடுவார்களோ? என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. எனவே,  இந்த விடயம் தொடர்பில் அதி தகுதிவாய்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து, அவர்களது சிபாரிசுகளையும் பெற்று, மேற்படி பாடநூல்களில் திருத்தங்களை – மாற்றங்களை மேற்கொள்வதற்கும், குறிப்பாக இந்து சமய பாடசாலை பாடநூல்களின் விடயதானங்களை இலகுபடுத்துவதற்குமான ஏற்பாடுகளையும் தற்போது நான் முன்னெடுத்து வருகின்றேன்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் மேலும் பல இந்து சமய ஆலயங்கள் புனரமைக்கப்பட வேண்டியத் தேவை இருப்பதாகத் தெரிய வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மற்றும் மலையகப் பகுதிகளைச் சார்ந்த இந்து சமய வணக்க வழிபாட்டுத் தலங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவற்றை முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்புச் செய்வதற்கு எண்ணியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொண்டு,

எமது இளம் சந்ததியினர் – குறிப்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் சந்ததியினர் பல்வேறு சமூக சீர்கேட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அன்றாடம் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு கடந்த கால ஏனைய தமிழ்த் தலைமைகளே பொறுப்பு கூற வேண்டும். அந்தத் தமிழ்த் தலைமைகளது வழிகாட்டல்கள் சமூகப் பொறுப்புடன் ஒழுக்கமானதாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், எமது சமூகத்தில் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றே கருத வேண்டியுள்ளது.

எனவே எமது தற்கால மற்றும் எதிர்கால இளம் சந்ததியினருக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைய வேண்டிய பொறுப்பில் இந்து சமய அறநெறிப் பாடசாலை ஆசியர்களான உங்களுக்கும் அதிகமான பங்களிப்பு இருக்கின்றது என்பதால் உங்களது மேலான சேவையின் இன்றியமையாத தேவையினை வலியுறுத்திகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

47363148_364640010956762_504635558945882112_n

47431723_270940277105970_7777919704126980096_n

47285182_770000949999725_7227653433375850496_n

47450913_256275668402895_3235912460561022976_n

Related posts:

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...
ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...