மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப்படைகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு கூடுதல் வசதிகளுடன் மீள்கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்படுவதை பாராட்டுகின்றேன். எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பதிவிட்டள்ளதாவது –
துரையப்பா விளையாட்டு அரங்கு புனரமைப்பு செய்யப்பட்டு, தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவதனூடாக யாழ்ப்பாணத்திலுள்ள மாணவ, மாணவிகளும், எமது இளைஞர் யுவதிகளும் பயனடைவார்கள்.
எமது மாணவ, மாணவிகளினதும், இளைஞர், யுவதிகளினதும் விளையாட்டுத்திறன்களை வளர்த்தெடுத்து அதனூடாக அவர்களது மன வலிமையையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளமுடியும்.
எமது எதிர்காலச் சந்ததியினர் விளையாட்டுத் திறன்களை வளர்த்தெடுத்து உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் தமது திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நான் விரும்பினேன்.
இதற்காக யுத்தப் பாதிப்புக்களுக்கு இலக்காகி இருந்த துரையப்பா விளையாட்டு அரங்கை அவ்வப்போது செப்பனிட்டும், புனரமைத்தும் எமது சமூதாயம் நன்மையடைய நடவடிக்கை எடுத்திருந்தேன். ஆனாலும் துரையப்பா விளையாட்டு அரங்கை நவீன வசதிகளுடனும், முழுமையாகவும் மீள் புனரமைப்புச் செய்யவேண்டும் என்றும் முயற்சி செய்தேன்.
அழிந்த எமது தாயகப் பகுதியை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும், எமது மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய அரசாங்கத்திடம் பல உதவிகளை கேட்டிருந்தேன்.
எனது கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டும்,புரிந்து கொண்டும் பல உதவிகளையும் செய்ய முன்வந்தது. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்திலும் இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவ்வாறு இந்திய அரசாங்கம் செய்த உதவிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை மேலதிகமான வசதிகளுடன் மீள்புனரமைப்பு செய்வதற்கு உதவி செய்தது. 145 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி மீள் புனரமைப்புப் பணிகளை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்றவகையில் நானும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம, வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண ஆளுனர் சந்திரசிறி, இந்திய தூதுவர் வை.கே சின்ஹா, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்து புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.
துரையப்பா விளையாட்டு அரங்கை மீள்புனரமைப்புச் செய்யும் திட்டத்தில் பிரதான நுழைவாயில், பிரதான பார்வையாளர் பகுதி, பார்வையாளர் பகுதியின் இரண்டாவது மேடை, சுற்றுவேலி, மலசலகூட வசதி, நீர்வழங்கல் வசதி, களஞ்சியசாலை என்பவற்றை புனரமைப்பு செய்வதோடு, 400 மீற்றர் ஓடுபாதையை தரமாக அமைப்பது, உடற்பயிற்சிக் கூடத்தை அமைப்பது, இரவுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்றவகையில் மின்விளக்குகளை பொருத்துதல், மைதானத்தை பராமரிக்கும் பொருட்டு நீர் தெளிக்கும் வசதியை ஏற்படுத்துவது போன்ற திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்தப் பணிகளை நிறைவு செய்து மீண்டும் எமது மாணவ, மாணவிகளினதும், இளைஞர், யுவதிகளினதும் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 18ஆம் திகதி கையளிக்கப்படுவதானது மகிழ்ச்சிக்குரியதாகும்.
ஆட்சி அதிகாரத்தில் எமது மக்களின் மீள்எழுச்சி மீதான விருப்பத்துடனும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு ஆரம்பித்துவைத்த பணிகள் இன்று மக்களுக்கு பயன்தருவதாக அமைந்துள்ளது.
இதுபோன்று நாம் மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப்படைகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|