மக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, April 12th, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை வென்றெடுத்துக் கொடுப்பதற்காக நாம் எந்த எல்லைவரைக்கும் செல்ல தயாராக இருக்கின்றோம். அதனடிப்படையிலேயே இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க யாழ் மாவட்டத்தில் பல சபைகளை ஆட்சியமைக்க நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவை வெளியிலிருந்து வழங்கியிருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிர்வு நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நாம் எமது கொள்கையை கைவிடவும் இல்லை அதிலிருந்து தடம் மாறிப் போகவும் மாட்டோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு நாம் ஆதரவு வழங்கியுள்ளதானது மக்கள் நலன்சார்ந்த விடயத்தை முன்னிறுத்தியதாகும்.
யாழ்மாவட்டத்தின் பல சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில் மக்களுக்கு சேவையாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம் என்றதன் அடிப்படையில் ஆட்சியமைப்பவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைப்பதற்காகவே நாம் வெளியிலிருந்து ஆதரவை வழங்கியிருக்கின்றோம்.
ஆனாலும் குறித்த சபைகளை நாமும் மக்களும் எதிர்பார்த்தது போல ஆட்சி செய்பவர்கள் செயற்படுத்தாது போனால் அதனை எதிர்த்து போராடவும் நாம் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


