பொருளாதார மீள்ச்சி பற்றிய நம்பிக்கையினை சமூகமயப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, September 1st, 2022


~~~~

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீள்வது எவ்வாறு என்பது குறித்து சிந்தித்து, செயற்படுவதுதான் சாலச் சிறந்த செயற்பாடாகும் என்பதுடன், பொருளாதார மீள்ச்சி குறித்த நம்பிக்கையினை சமூகமயப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அந்நியச் செலாவணி கட்டமைப்பினை அதிகரித்துக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், ஏற்றுமதியின் ஊடாக அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்கின்ற நிலைபேறான செயற்றிட்டங்களை கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று(01.09.2022) கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட நிவாரணங்களை விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், கடற்றொழில் அமைச்சை அல்லது சம்மந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர்களை தொடர்பு கொள்ளமாறும் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இன்றைய பொருளாதார நிலையிலிருந்து மீள்வதற்காக, குறுகிய மற்றும் நீண்டகால நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை முன்வைத்து, இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ முன்வைத்திருப்பது, நட்டின் தலைவர் என்ற வகையில் முன்மாதிரி செயற்பாடாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய செயற்பாடுகளுக்கு போதிய பங்களிப்பு வழங்கும் வகையில், ஏற்றுமதியின் ஊடாக அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்கின்ற நிலைபேறான செயற்றிட்டங்களை கடற்றொழில் அமைச்சு பரவலாக முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்ததார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடலட்டைப் பண்ணைகளை விஸ்தரித்தல், அதற்கென கடலட்டை கருத்தரிப்பு நிலையங்களை ஸ்தாபித்தல், குஞ்சு வளர்ப்பு மையங்களை ஸ்தாபித்தல், ஏற்றுமதி சார்ந்த இறால் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு, அது சார்ந்த பெறுமதி சேர் ஏற்பாடுகள், சங்கு உற்பத்தி மேம்பாடு போன்ற வேலைத் திட்டங்கள் பொருத்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அத்துடன், கடலுணவு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக நாம், பலநாட் கலங்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கி, வலுப்படுத்தி வருகின்றோம்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில்கூட, மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து, ஏற்றுமதி சார்ந்த கடலுணவு உற்பத்தியில் ஈடுபடுகின்ற பலநாட் களலங்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபடுவதற்கான வழிகளை நாம் வகுத்துக் கொடுத்திருந்தோம்.
நன்னீர் வேளாண்மை சார்ந்து இந்த வருடத்தில் இதுவரையில், நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்கள் தோறும் 1044 பாரிய, நடுத்தர, சிறிய குளங்கள் மற்றும் பருவகால நீர்நிலைகளில் 147,042,543 ரூபா செலவில், 5கோடி 2,675,300 மீனினக் குஞ்சுகளை வைப்பில் இட்டுள்ளோம்.
இப்போது தாராளமாக இல்லை எனினும், மண்ணெண்ணெய் பரவலாக நாடு முழுவதுமாக கிடைத்து வருகின்றது என நினைக்கின்றேன்.

அதேவேளை, மண்ணெண்ணை டீசல் போன்றவற்றை தனியார் மூலமாகவும் இறக்குமதி செய்து, கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் தாராளமாக கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என்பதுடன் மண்ணெண்ணை விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு மானியம் கிடைப்பதற்கும் ஏதோவொரு வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுடனும், கௌரவ பிரதமர் திணேஸ் குணவர்தன அவர்களுடனும் கலந்துரையாடியதன் பயனாக இம்முறை இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கும், அதேநேரம் மின்சார வசதியற்ற மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கென 5.000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது கடற்றொழிலாள மக்கள் மற்றும் மலையக மக்கள் சார்பில் கௌரவ ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும், கௌரவ பிரதமர் திணேஸ் குணவர்தன அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம் இந்திய இழுவை வலைப் படகுகளின் ஆக்கிரமிப்பு தொடருமானால் 2018ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை, அவற்றின் தொழில் முறைமையை மாற்றி எமது கடற்றொழிலாளர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார். – 01.09.2022

Related posts:

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவா...
ரயில் சேவையின் அதிகரிப்பு நாட்டின் வாகன நெரிசல்களுக்கு தீர்வைத் தரும் -  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...

வாக்குகளால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?-டக்ளஸ் தேவானந்தா கேள்வி...
அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
கடந்த கால வரலாற்று தவறை மக்கள் இம்முறை மாற்றி எழுதுவர் - பருத்தித்துறையைில் டக்ளஸ் எம்.பி!