பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது கூட்டமைப்பின் இயலாமையை வெளிக்காட்டுகிறது – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, July 5th, 2016
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டுமென சம்மந்தன் கூறியிருப்பது அவரது இயலாமையையும், ஆற்றலின்மையையுமே காட்டுகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த பொருளாதாரமைய அமைவிடம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குள் எழுந்துள்ள முரண்பட்ட நிலைமை காரணமாக அதை அமைப்பதில் இழுபறி நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் சம்பந்தன் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலயத்தை வவுனியா நகரப்பகுதியின் இரண்டு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்பது அதற்கான திட்டவரைபாக இருக்கின்றது. அப்படி வவுனியாவில் திட்டமிட்டபடி பொருளாதார மையத்தை அமைக்க முடியாவிட்டால், திட்டத்தை மாற்றி மதவாச்சியில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையினர் முதலில் வவுனியா தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பின்னர் அரசியல் சுய இலாபங்களுக்காக பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டுமென கூறினார்கள்.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை, வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமாக கருதிக்கொண்டும், திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தை இப்போது அநாவசியமான இழுபறி நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.
திட்டத்தை முழுமையாக விளங்கிக்க கொண்டு வவுனியாவில் அமையப்பெறுவதற்கான முடிவை எடுத்து செயற்படுத்தாமல் அதைத் தட்டிக்கழிக்கும் நோக்கத்துடன் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு செய்யப்போவதாக சம்பந்தன் கூறியிருக்கின்றார்.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொறுத்தமான இடத்தை தெரிவு செய்யத் தெரியாத கூட்டமைப்பின் தலைமையும், வடக்கு மாகாண சபையும், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை எடுப்பதற்கும், நாடாளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகளை பொறுப்பெடுப்பதற்கும், கோட்டுச் சூட்டோடு ஜெனிவாவுக்குப் போவதற்கும் தமிழ் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்க வேண்டும்.
வாக்குப் போட்ட தமிழ் மக்களிடம் அதற்கெல்லாம் கருத்துக்கணிப்பு நடத்தி தீர்மானம் மேற்கொண்டிருந்தால் அதை வரவேற்றிருக்கலாம். அவ்வாறில்லாமல் தமக்கான பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்காமலே அரசுடன் இரகசிய பேச்சுக்கள் நடத்திப் பெற்றுக் கொண்டவர்கள், சாதாரணமாக ஒரு மாவட்டத்தின் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமென நாடகமாடுகின்றனர்.
தவிரவும் அமையப்பெறுகின்ற பொருளாதார மத்திய நிலையமானது, வவுனியா மாவட்டத்தின் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும், பயனாளிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனுள்ளதாகவும், இலகுவான போக்குவரத்து வசதிகளுக்கு உகந்த இடத்திலும் அமையப்பெறுவதும் மிக அவசியமாகும்.
மக்களின் நலனை கவனத்திலெடுக்காமல் தமது அரசியல் நலனை முன்னிறுத்தி இவ்விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்களாக இருந்தால் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மத்திய நிலையமும் எமது கையிலிருந்து பறிபோய்விடும் என தெரிவித்தள்ளார்.

Related posts:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
மன்னார் மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய மக்கள் குறைகேள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர...

யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...
ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது - அ...