பொது மக்களை குறி வைத்து யார் தாக்குதல் நடத்தினாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசப்படுகின்ற சூழலில்,  இரத்தக்கறை படிந்த கடந்த கால வரலாறுகளின் வடுக்களை நான் எண்ணிப் பார்க்கிறேன்,..

ஈவிரக்கமற்று கொன்று பலியாக்கப்பட்ட அப்பாவி மக்களின் அவலச்சாவுகள் வரலாறெங்கும் நடந்தேறியிருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும், அது ஏற்படுத்திய அவலங்களும் அழிவுகளும்கூட,  அவ்வாறான ஒன்றுதான்.

இந்த நாட்டிலே அழிவு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நவாலியிலும், நாகர் கோயிலிலும், கொக்கட்டிச்சோலையிலும் சத்துருக்கொண்டானிலும் நடந்த படுகொலைகள் போன்றே காத்தான்குடி பள்ளிவாசலிலும், மத்திய வங்கி தாக்குதலிலும், தலதா மாளிகை தாக்குதலிலும், அறந்தளாவ, அநுராதபுரம் தாக்குதலிலும் மற்றும் செஞ்சோலை தாக்குதல்களிலும்,  செம்மணியிலும்  பொது மக்கள் குறி வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோன்று  யுத்தத்தின்போதும் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான எமது மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

வெலிக்கடை சிறையில் எவ்வாறு நரபலி வேட்டை நடாத்தப்பட்டதோ அவ்வாறே கந்தன் கருணை படுகொலையும் நடந்தேறியிருக்கிறது.

பொது மக்களை குறி வைத்து யார் தாக்குதல் நடத்தினாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை,..

எந்தத்தரப்பு பொதுமக்களை குறிவைத்து தாக்கினாலும் அதை பாரபட்சமின்றி கண்டித்தே வந்திருக்கின்றோம்..

ஒரு தரப்பின் செயல்களை மட்டும் கண்டித்து விட்டு மறு தரப்பின் செயல்களை கண்டிக்க வக்கற்று நிற்கும் கூட்டத்தினர் கூட்டத்தில் நின்று கூடிப்பிதற்றுகிறார்கள், கூச்சலிடுகிறார்கள்,..

எம்மைப்பொறுத்த வரையில், யுத்தத்தை நடத்திய அரசுககளில் எமது மக்கள் நலன் சார்ந்து அங்கம் வகித்திருந்தாலும்,யுத்தத்தை நிறுத்துமாறே நாம் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எந்தவொரு யுத்தங்களையும் நாம் ஆதரித்தவர்கள் அல்ல,நாடாளுமன்ற ஹென்சாட் அறிக்கைகளை எடுத்துப்பாருங்கள் அதன் உண்மைகள் புரியும்.

அழிவு யுத்தத்திற்கு கண்கள் இல்லை. இலக்கும் இல்லை. அது அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கும்.

இன்று யுத்தமும் இல்லை அழிவுகளும் இல்லை.இதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். இனியொரு இழப்போ அன்றி அழிவுகளோ நடந்து விடக்கூடாது.

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து விதமான வன்முறைகள் காரணமாகவும்  பலியாக்கப்பட்ட அனைத்து  மக்களுக்கும் நியாயம் தேவை. அது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கான நிரந்தர தீர்வாக இருத்தல் வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: