புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களும் புலிகளானகவே கருதப்படுகின்றனரா? ஏன் இந்த பாரபட்டசாம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Thursday, August 9th, 2018

‘புலிகள் மீண்டும் வர வேண்டும்’ என்று வடக்கிலும், ‘புலிகள் மீண்டும் வரப் போகிறார்கள்’ என தெற்கிலும் ஆளுக்காள் வாக்கு வங்கிகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகின்ற இந்த வாய்ச் சொல் சவடால்களை விட்டு விடுங்கள். அதை விட்டு நீங்கள் மீளும் வரையில் தேசிய நல்லிணக்கம் என்றும், இன ஐக்கியம் என்றும், இனங்களுக்கிடையே சகவாழ்வு என்றும் கூறிக் கொண்டு செலவு செய்கின்ற மக்களது வரிப் பணமானது வீண் விரயம் என்றே கூறி வைக்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நிவாரணங்கள் வழங்கும் முகமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக ஒரு செய்தி அண்மையில் வெளிவந்திருந்தது. முன்னாள் இயக்க உறுப்பினர்கள் எனும்போது, புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஏனைய இயக்கங்களில் இருந்தோரும் இருக்கின்றார்கள்.

இவர்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தோர் அரசாங்கத்தினால் – அதுவும் யுத்தத்தில் ஈடுபட்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். அதுவும், இந்த நாட்டின் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். அன்றி, எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனத்தாலோ அல்லது சர்வதேச குழுக்களாலோ இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

அதாவது, கடந்த கால யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்புகளில் ஒரு தரப்பிற்கு மற்றைய தரப்பு புனர்வாழ்வு அளித்துள்ளது.  இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகமயப்படுத்தவும்பட்டுள்ளார்கள். முழுமையான புனர்வாழ்வுக்கு இவர்கள் உட்படுத்தப்பட்டிருக்காவிட்டால் சமூகமயப்படுத்தப்பட்டிருக்கப்பட மாட்டார்கள். இதனை நான் சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரியும்.

இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கென உரிய, போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்தவகையில், இவர்களுக்கு ஏதேனும் நிவாரண வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதற்கென ஒரு திட்டம் கொண்டுவரப்படுகின்றபோது, ‘புலிகளுக்கு நிதி கொடுக்கப் போகிறார்கள்’ என சுயலாப அரசியலுக்காக கூக்குரல் இடுகின்றவர்கள், அந்த மக்களின் பாதிப்புகளை மறந்துவிடுகிறார்கள். இவ்வாறு இவர்களை பாதிக்கவிட்டுக் கொண்டே நல்லிணக்கம் பற்றியும்  பேசுகிறார்கள்.

ஒரு பக்கத்தில் இராணுவத்தினரைப் போற்றிப் பாடுகின்ற நீங்கள், அதே இராணுவத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தவர்களை மீண்டும் புலிகள் என்றே சித்தரிப்பதன் மூலம், இராணுவத்தின் மேற்படி புனர்வாழ்வு அளிப்பு மீது சந்தேகங் கொள்கின்றீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன். அதாவது – இலங்கை இராணுவத்தின் மீது சந்தேகங் கொள்கின்றீர்களா? என்றே கேட்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: