புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 8th, 2016

புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றும் ஏனைய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு, மீள்க் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், புலிகள் இயக்கம் உட்பட பல தமிழ் இயக்கங்களில் போராளிகளாக கடந்த காலங்களில் செயற்பட்டுவந்த பலர் இன்றைய சூழ்நிலையில் எவ்வித வாழ்வாதார வசதிகளும் இல்லாத நிலையில், மிகவும் பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர்.

புலிகள் இயக்கத்தில் போராளிகளாகச் செயற்பட்டவர்கள் கடந்த கால ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையிலும், ஏனைய தமிழ் இயக்கங்களின் முன்னாள் போராளிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையிலும் சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த கால அரசியல் சூழ்நிலையில், அரசியல் காரணமாகவும், பலவந்தங்கள் காரணமாகவும், அறியாமை காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும் இவர்கள் இயங்கங்களில் இணைந்து செயற்பட வேண்டிய நிர்ப்பத்தங்கள் ஏற்பட்டிருந்தமையினால், அரச தொழில் வாய்ப்புக்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் கல்வித் தகைமைகளையோ, ஏனைய திறமைகளையோ, பொருளாதார வகதிகளையோ கொண்டிராத நிலையிலேயே இவர்களில் பலர் இருக்கின்றனர்.

எனவே, இவர்கள் கொண்டிருக்கக்கூடிய திறமைகளை இனங்கண்டு, அதற்கேற்ப தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடிய வகையிலும், அவ்வாறான திறமையற்றவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு ஏதுவான தொழில் பயிற்சிகளை வழங்கி, அத் தொழிற் முயற்சிகளை இவர்கள் மேற்கொள்ளத்தக்க வகையில் நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பின்; அது இவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும் என அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து ஒரு பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...
அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக...