புங்குடுதீவு பாடசாலை மாணவி கேஷனாவின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக் கூறவேண்டும் – டக்ளஸ் எம்.பி குற்றச்சாட்டு!

புங்குடுதீவு பாடசாலை மாணவி திருலங்கன் கேஷனா நேற்றையதினம் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவமானது கடற்படை சாரதியினது தான்தோன்றித்தனமான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
குறித்த வாகனத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட மாணவி உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக புங்குடுதீவு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சமயம் அவ் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் தான் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு வடக்கு மாகாண சபையின் செயலற்ற தன்மையே காரணம் எனவும் குறித்த வைத்தியசாலை வடக்கு மாகாணசபைக்குட்பட்ட வைத்தியசாலையாக இருப்பதனால் இந்த மாணவியின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக்கூறவேண்டும்
ஆனால் அவர்களது அசமந்தமான போக்கே இந்த மரணத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. நாம் அதிகாரத்திலிருந்தபோது அவ்வாறான ஒரு நிலைமை உருவாக இடமளித்திருக்கவில்லை.
வைத்தியசாலை ஆனாலும் சரி ஏனைய திணைக்களங்களானாலும் சரி அந்தந்த இடங்களுக்குத் தேவையான அளணிகளையும் பௌதீக வளங்களையும் நாம் உடனுக்குடன் நிறைவுசெய்து கொடுத்திருந்தோம். அந்தவகையில் குறித்த மாணவியின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபை பொறுப்புக் கூறவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த மாணவியின் அகால மரணச் செய்தி மிகுந்த வேதனையை தரும் அதே வேளை இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்கும்வண்ணம் அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா
புங்குடுதீவு மாணவியின் இழப்பு செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், பள்ளிப் பருவ சிறுமி பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சமயம் இந்தப் பெருந்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
இந்த மாணவியின் இழப்பு அவரது குடும்பத்திற்கும் அவர் சார்ந்த பாடசாலை சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அந்தவகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாமும் எமது அழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
Related posts:
|
|