பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் அரசு உரிழய கவனம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

இலங்கைப் புகையிரதத் திணைக்களம் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்கின்றபோது, வடக்கில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளின் மூலமாக ஏற்படுகின்ற விபத்துகள் இன்று வடக்கு மாகாணத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அண்மைக் காலமாக தொடர்ந்து பலர் இவ்வாறான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களைக் காணக்கூடியதாகவுள்ளது.
கடந்த காலங்களில், பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணியில் நியமிக்கப்பட்டிருந்த காப்பாளர்கள்கூட தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும், இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசு முக்கிய அவதானமெடுக்க வேண்டும். மேற்படி கடவைகளின் மூலமான உயிரிழப்புகள் வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதென்பது மிகவும் வேதனையான விடயமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் சுமார் 880 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சுமார் 3628 பேர் தற்போது கடமையாற்றி வருகின்ற நிலையில், இவர்களது தொழில் மற்றும் ஊதியப் பிரச்சினை என்பது ஒரு பாரிய பொருளாதாரப் பிரச்சினையாக இந்த பணியாளர்களிடையே நிலவி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தங்களது ஊதியம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணியாளர்கள் அவ்வப்போது பணிப் பகிஷ;கரிப்புகளில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுமார் 1230 பேர் பொலிஸ் திணைக்களத்தினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
இந்த நிலையில், இப் பணியாளர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் பணிபுரிந்து வருகின்ற நிலையில,; நாளொன்றுக்கு 250 ரூபா வீதமாக மாதம் 7500 ரூபா மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாகவும், அரச பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லது தனியாரத்துறை பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லாமலும், தற்காலிக, அமைய, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் என்ற எந்தவொரு தரத்திலும் அல்லாமலும் இப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, இப் பணியாளர்களை இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துடன் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறானதொரு நிலையில் இவர்களது தொழில் உரிமைகள் நிலைநிறுத்தப்படக்கூடிய ஏற்பாடுகள் குறித்து அவதானத்தைச் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|