பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் – அனுதாபப் பிரேரணையில் டக்ளஸ் எம்.பி.!

Thursday, February 22nd, 2018

பதவிகள் தமக்கான கௌரவத்திற்கு உரியவை அல்ல. அவை எமது மக்களின் நலன்சார்ந்து செயலாற்ற வேண்டிய கடமைகள் என்பதை தங்களது செயற்பாடுகளின் ஊடாக பேராசிரியர் டபிள்யூ. ஏ. விஸ்வா வர்ணபால கௌரவ இலியன் எம். நாணாயக்கார ஆகியோர் நிரூபித்தவர்கள். அந்த வகையில் இந்த இருவரையும் நினைவு கூருவதில் நான் பெருமிதம் அடைகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கௌரவ பேராசிரியர் டபிள்யூ. ஏ. விஸ்வா வர்ணபால கௌரவ இலியன் எம். நாணாயக்கார, ஆகியோரது  அனுதாபப் பிரேரணையின் பொது நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இலியன் எம். நாணாயக்கார மற்றும் கௌரவ விஸ்வா வர்ணபால ஆகியோர் தொடர்பிலான அனுதாபப் பிரேரணைகளில் எனது கருத்துக்களையும் இணைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியமையையிட்டு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது நாட்டின் முன்னணி இடதுசாரி கொள்கை சார்ந்த அரசியல்வாதிகளாக கௌரவ இலியன் எம். நாணாயக்கார அவர்களையும் கௌரவ விஸ்வா வர்ணபால அவர்களையும் குறிப்பிட இயலும்.

கௌரவ இலியன் எம். நாணாயக்கார அவர்கள் தான் வகுத்துக் கொண்ட கொள்கைக்கு அமைவாக தனது அரசியல் களத்திலும் அயராது செயற்பட்டவர்.

பேராசிரியர் வட்டரெக்கே ஆராச்சிலாகே விஸ்வா வர்ணபால அவர்கள் எனது சமகாலத்து நாடாளுமன்ற உறுப்பினராகவும்  அமைச்சராகவும் இருந்தவர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் இளங்கலைப் பட்டம் அமெரிக்க பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் என கல்வித் தகைமைகள் கொண்டிருந்த பேராசிரியர் விஸ்வா வர்ணபால அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் விரிவுரையாளராகவும் அரசறிவியல்துறை தலைவராகவும் பணியாற்றியிருந்த நிலையிலேயே அரசியல் பிரவேசம் கண்டவர்.

அந்த வகையில் 1980 களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான இவர் 2004ஆம் வருடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற பிரவேசம் கண்டவர். பின்வந்த காலங்களில் பிரதி வெளிவிவகார அமைச்சராகவும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராகவும் உயர் கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த அன்னார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்திருந்தார்.

உயர் கல்வி அமைச்சராக அவர் பொறுப்பேற்றிருந்த காலத்தில் பல்கலைக்கழகக் கல்வி சார்ந்தும் மாணவர்களது வசதிகள் சார்ந்தும் சிறந்த பல பணிகளை முன்னெடுத்திருந்தார்.

அக்கால கட்டத்தில் எனது கோரிக்கையை ஏற்றிருந்த அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் பட்டப் பின்படிப்பு கல்விப் பீடத்திற்கென மூன்று மாடிகள் கொண்ட புதிய கட்டிடமொன்றினை அமைப்பதற்கென நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதேபோன்று எமது முதலாவது பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஒன்று இல்லாத குறையினை தீர்க்கும் வகையில் தமிழ்த்துறையினை உருவாக்குமாறு நான் முன்வைத்திருந்த கோரிக்கையையும் அவர் ஏற்றிருந்தார். இருந்தும் அந்தக் காலகட்டத்தில் அது சாத்தியமாக்கப்படாமல் விடப்பட்டது.

எல்லோருடனும் நன்கு பழுகுகின்ற தன்மையும் எல்லோரையும் அனுசரித்துப் போகின்ற குணமும் கொண்ட அமரர் விஸ்வா வர்ணபால அவர்களது சேவைகள் என்றுமே எமது நாட்டில் மறக்கப்பட இயலாதவை.

அதேபோன்று இலியன் எம். நாணாயக்கார அவர்களும் சிறந்த மனிதப் பண்புகள் கொண்ட ஒருவராக தனது வாழ்க்கையினை ஏனையவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்தவர். எனது தந்தையார் ஏற்றிருந்த இடதுசாரிக் கட்சியின் கொள்கைகளை இறுதிவரையில் ஏற்றிருந்தவர். அந்த வகையில் எனது இடதுசாரி கொள்கை சார்ந்த குடும்பத்தில் ஒருவராக இணைந்திருந்தவர் கௌரவ இலியன் எம். நாணாயக்கார அவர்கள்.

அந்த வகையில் பதவிகள் தமக்கான கௌரவத்திற்கு உரியவை அல்ல. அவை எமது மக்களின் நலன்சார்ந்து செயலாற்ற வேண்டிய கடமைகள் என்பதை இந்த இருவருமே தங்களது செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்தவர்கள்.  இந்த இருவரையும் நினைவு கூறுவதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

இந்த இருவரையும் நினைவு கூறுகின்ற இந்நாளில் இவர்களது பணிகளையும் குணநலன்களையும் எமது எதிர்கால சந்ததிக்கும் எடுத்துக்காட்டுகின்ற வகையிலான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கௌரவ விஸ்வா வர்ணபால அவர்களினதும் கௌரவ இலியன் எம். நாணாயக்கார அவர்களினதும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் உட்பட அனைவருடனும் எமது மக்கள் சார்பாக எனது அனுதாபங்களையும் பகிர்ந்துகொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts:

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் அணி திரண்டு ...
நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு - சமகால அரசியல் நில...