படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும்!

Wednesday, March 21st, 2018

நாட்டில் படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும். இந்த விடயங்களை நாம் இந்த நாடு குறித்த தூர நோக்குடைய பார்வையிலேயே வலியுறுத்தியிருந்தோம். அது குறித்து நீங்கள் உரிய அவதானங்களை செலுத்தவில்லை. அதன் விளைவு எத்தகையது என்பதை நாம் அண்மையில் அம்பாறையிலும், கண்டி, திகனயிலும் காணவில்லையா? என்பது குறித்து சிந்தித்துப் பாருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம், நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

படைகளும், பொலிசாரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும், மக்கள்; தொகைக்கும் ஏற்ப நிலை கொண்டிருத்தல் வேண்டும் என்றும், படைகளிலும், பொலிஸ் துறையிலும் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தோம்.

இத்தகைய சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர், அவர் செய்தார், இவர் செய்தார், நான் செய்யவில்லை, அவர் செய்யவில்லை என்றெல்லாம் கருத்து தெரிவித்துக் கொண்டு திரிவதில் எவ்விதமான பயனும் இல்லை. நாம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததைப் போன்று இந்த நாட்டில் ஏற்பாடுகள் இருந்திருப்பின் இன்று அம்பாறை சம்பவம், கண்டி, திகன சம்பவம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லாதிருந்திருக்கும் என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

வெறுப்புணர்வுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகளுக்கு எதிரான தடைச் சட்டமூலமொன்று கொண்டு வரப்படுவதாக இருந்தது. அது, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என அதற்கு எதிராக செயற்பட்டவர்கள், அவர்கள் கூறிய அந்தக் கருத்துச் சுதந்திரத்தால் அண்மையில் அம்பாறையிலும், திகனயிலும் இழக்கப்பட்ட மனித உயிர்களுக்கும், எரிந்து முடிந்த சொத்துக்களுக்கும் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் இலங்கையின் தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமையின் வெளிப்பாடு என அமெரிக்காவின் முன்னாள் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தைக் கையாண்ட தூதுவர் ஸ்ரீபன் ரப் கூறியிருக்கின்றார என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

Related posts: