தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பாக இடத்திற்கு இடம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் – தீர்க்கமாக ஆராய்ந்து புதிய ஒழுங்கு விதிகள் வெளியிடப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, September 16th, 2022

வெளிச்சம் பாய்ச்சுதல், சுருக்கு வலை, டைனமைற் பயன்படுத்துவது போன்ற தொழில் முறைகள் பூரணமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பாக இடத்திற்கு இடம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் காணப்படுவதால் அவைதொடர்பாக தீர்க்கமாக ஆராய்ந்து புதிய ஒழுங்கு விதிகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேுபான்று, தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைத் தொழிலை செய்வதற்கு முல்லைத்தீவில் சிலருக்கு நீதிமன்றத்தினால்  அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,  கடற்றொழில் அமைச்சினால் சுருக்கு வலை  தொடர்பான புதிய ஒழுங்கு விதிகளை வெளியிடப்படும் வரையில் அவர்கள் தொழிலில் ஈடுபட முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கரைவலை தொழிலில் ஈடுபடுவோர் இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தொழில் முறை என்பதை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் மற்றும் கடற்படையினருடன் இணைந்து, விசேட பொறிமுறை ஒன்றின் மூலம் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், மாத்தளன் களப்பு, இரட்டை வாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளையும் தூர்வாரி அபிவிருத்தி செய்வதுடன் நீர்வேளாண்மை சார் உற்பத்திகளை விருத்தி செய்யும் நோக்கில், குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்வேளாண்மை ஊடாக மேலதிக வாழ்வாதாரத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்

இந்நிலையில்

முல்லைத்தீவு, மாத்தளன் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தங்களின் மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்தனர்.

கடந்த கால யுத்தத்தின் வடுக்களை உடலில் சுமந்து மாற்றுத் திறனாளியாக மீன்பிடிப் படகுகளுக்கான இயந்திரம் திருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளியான ஆறுமுகம் செல்வராஜாவை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவரின் தொழிலை விஸ்தரிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு உறுதியளித்தார்.

மாத்தளன் – புதுக்குடியிருப்பு வீதியை ஊடறுத்துச் செல்லுகின்ற மாத்தளன் களப்பு நீர் நிலையினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனை தூர்வாரி நீர்வேளாண்மை உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

நீண்ட காலமாக குறித்த களப்பு நீர்நிலை கடந்த பல வருடங்களாக தூர்வாரப்படாமையினால், கோடை காலத்தில் நீர்நிலை வறண்டு போவதாகவும் இதனால் பெருமளவான மீன்கள் அநியாயமாக உயிரிழந்து போவதாகவும் பிரதேச கடற்றொழிலாளர்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

புதுக்குடியிருப்பு – முல்லைத் தீவு வீதியை ஊடறுத்து செல்லுகின்ற இரட்டை வாய்க்கால் களப்பினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருக்கின்ற நிலையில், அதனை தூர்வாருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

முன்பதாக முல்லைத்தீவு, மாத்தளன் பிரதேசத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழால்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

கடற்றொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து உடனடித் தீர்வினை வழங்கும் நோக்குடன்,  கடற்றொழில் திணைககளத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: