நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
Friday, September 21st, 2018
இம் மாதம் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ பணி – (நில மெஹெவர) – தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான நடமாடும் சேவை இடம்பெற்றிருக்க இருந்த நிலையில், அதற்கு முன்பதாக, பிரதேச செயலாளரினால் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதமொன்றில், ‘எமது பிரதேச செயலாளர் பிரிவிற்கான மேற்படி நடமாடும் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெறவுள்ளமையாலும், இந்த நிகழ்வில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சேவைகளைப் பெறவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுவதாலும், இந்தச் சேவை பெறுதலில் எமக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு வகையான இதர செலவீனங்கள் ஏற்படும் என மதிபிடப்பட்டுள்ளது.
ஆகையால், தங்கள் பிரிவிலுள்ள நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் மூலம் இந்த நிகழ்விற்கு ஏற்படும் செலவீனங்களுக்காக அவர்களால் இயன்றளவு அன்பளிப்பு தொகையைச் சேகரித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாகத் தெரிய வருகின்றது.
அதுமட்டுமல்லாது, மேற்படி சேவையைப் பெற்றுக் கொள்கின்ற பிரதேச கிராம சேவையாளர்கள் தலா 25 ஆயிரம் ரூபாவினை சேகரித்துத் தருமாறு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்த கிராம சேவையாளர்களுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த விடயத்தை கிராம சேவையாளர்கள் கிராம அபிவிருத்திச் சங்க மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களிடம் தெரிவித்திருந்ததாகவும் மேலும் தெரிய வருகின்றது.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளை உரிய காலகட்டங்களில் பெறத் தவறிய மக்களின் நலன் கருதி, அம் மக்கள் மேற்படி சேவைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குகின்ற வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மேற்படி சேவைக்குரிய செலவீனங்களை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும். இத்தகையதொரு நிலையில் மேற்படி நிதி வசூலிப்பானது எமது மக்களிடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ பணி – (நில மெஹெவர) – நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இதன் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்தோ, பொது அமைப்புகளிடம் இருந்தோ நிதி அறவிடுகின்ற ஏற்பாடுகள் தங்களது அமைச்சின் மேற்படி திட்டம் சார்ந்து உள்ளனவா?
உள்ளன எனில், எதற்காக? எந்த வகையில் அது அறவிடப்படுகின்றது என்பது தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?
இல்லை எனில், இத்தகைய நிதி வசூலிப்புகள் இதுவரையில் நாட்டில் எங்காவது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தங்களது அமைச்சுக்கு கிடைத்துள்ளனவா? யாழ்ப்பாணத்தில், மேற்படி தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இந்த நிதி வசூலிப்பு எந்த வகையில் இடம்பெற்றுள்ளது? எவ்வளவு நிதி வசூலிக்கப்பட்டுள்ளது?
வசூலிக்கப்பட்ட நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து ஆராய்ந்து கூற முடியமா? என்பதுடன் அதற்கான பதிலை அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உள்நாட்டலுவல்கள் கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
|
|
|


