நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.- ஜப்பான் தூதுவரிம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Thursday, August 25th, 2022

நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கக் கூடிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கான பொருளாதார ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப ரீதியான அனுபவங்களையும் ஜப்பான் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் இன்று(25.08.2022) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் நீண்ட கால நட்பு நாடாக விளங்குகின்ற ஜப்பான், கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்கை தரத்தினை கட்டியெழுப்புவதில் காண்பித்த அக்கறையை நன்றியுடன் நினைவுபடுத்தினார்.

அதேபோன்று எதிர்காலத்தில், கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, பாரம்பரிய கடற்றொழில் முறைமைகளைப் பயன்படுத்தி வருகின்ற யாழ் மாவட்டம் அடங்கலான வடக்கு கிழக்கினை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு, பொருத்தமான நவீன தொழில்நுட்ப ரீதியான தொழில் முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருந்தார்.

அதேபோன்று நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஏற்படுத்தித் தரக்கூடிய கடலட்டை, இறால், பண்ணை முறையிலான மீன் வளர்ப்பு மற்றும் கடல்பாசி போன்றவற்றின் உற்பத்திகளை பரந்தளவில் விஸ்தரிப்பதற்கும் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் அலங்கார மீன்வளர்ப்பு போன்றவற்றை விருத்தி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகள் தொடர்பாக ஜப்பான் தூதுவருக்கு தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர், அவற்றுக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதா ரீதியான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக கடலட்டைக் குஞ்சுகளை விரைவாக உற்த்தி செய்யக்கூடிய வழிவகைகளை அவசரமாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கடலுணவுகளை பாதுகாக்கக் கூடிய களஞ்சிய வசதிகளைக் கொண்ட முச்சக்கர வண்டிகள் கிடைக்குமாயின், தரமான கடலுணவுகள் மக்களை இலகுவாக சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கடலுணவுகள் சார்ந்த பெறுமதிசேர் உற்பத்திகளை கிராமிய ரீதியில் மேற்கொள்ளவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமானால் பொருளாதார ரீதியில் மேலதிக நன்மைகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் எதிர்பார்ப்புக்ளை கேட்டறிந்த ஜப்பானிய தூதுக்குழுவினர், இலங்கைக்கான மனிதாபிமான ஒத்துழைப்புக்களை வழங்குவற்கு ஜப்பான் தயாராக இருப்பதாகவும், கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உட்பட்ட அமைச்சு அதிகாரிகளும் கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர்களான திரு. எஸ். தவராசா மற்றும் பேராசிரியர் நவரட்ணராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். – 25.08.2022

Related posts:

சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ...
எல்லைதாண்டிய குற்றம் - இந்தியச் சிறையில் இருக்கும் உறவினர்களை மீட்டுத் தருமாறு உறவுகள் அமைச்சர் டக்...
வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் - மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறு...

மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் த...
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒர...