நாம் இல்லையென்றால் அன்று யாழ் குடாநாடும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சந்தித்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 30th, 2016

1996ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாம் யாழ் குடாநாட்டிற்கு வருகை தராதிருந்திருந்தால் எமது மக்கள் இன்று முள்ளிவாய்க்காலில் கண்ட பேரவலத்தையே அன்று குடாநாடும் கண்டிருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற யாழ் மாவட்ட பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினருடனான கூட்டத்தில் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் அன்று நாம் எடுத்துக்கொண்ட மத்திய அரசுடனான மதிநுட்ப அரசியல் நகர்வுளால் யாழ்.குடாநாட்டை பட்டினி மற்றும் வறுமையின் பிடியிலிருந்து மட்டுமல்லாது ஏற்படவிருந்த பேரவலத்திலிருந்தும் மீட்டெடுத்து எமது மக்களுக்கு நம்பிக்கை ஒளியை கொடுத்திருந்தோம். காணாமல் போனோர் சங்கம் அமைத்து போராட்டங்கள் நடத்தி காணாமல் போதல் மற்றும் கைதுகளை கட்டுப்படுத்தியிருந்தோம். அதற்காக நாம் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பி வாதிட்டோம்.மேலும் அன்று உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிகளை சுவீகரிக்க அன்றையஅரசு எடுத்த முயற்சிகளை எம்மிடம் இருந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்களது அரசியல் பலம் காரணமாக நாடாளுமன்றத்தை பகிஷ்கரிப்பு செய்து அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து தடுத்து நிறுத்தியிருந்தோம்.

எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் கண்ட பேரவலத்தை கூட தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அழிவு யுத்தத்தை விடுத்து ஜனநாயக பேச்சில் ஈடுபட வருமாறு அன்று போதிய அரசியல் பலத்தடன் இருந்த சக தமிழ் தரப்பினரிடம் நாம் பல வகைகளில் வலியுறுத்தி வந்திருந்தோம் ஆனால் தமிழ் மக்களது பிரதிநிதிகளாக அரசியல்பலம் கொண்டிருந்தவர்கள் எமது கருத்துக்களை தட்டிக்களித்தமையால்தான் அந்தப் போரவலத்தை நாம் காண நேர்ந்தது. மொத்தத்தில் நாம் எமது மக்களின் காப்பரண்களாகவே உறுதியோடும் அரசியல் துணிச்சலோடும் செயலாற்றி வந்திருக்கிறோம்.

எவர் எம்மீது எத்தனை தடவைகள் பழிசுமத்த முற்பட்டாலும் அத்தனை தடவைகளும் நாம் வளர்ச்சி அடைந்து சென்றிருக்கின்றோம் என்பதை வரலாறு பதிவிட்டு சென்றுள்ளது. எமது அரசியல் பயணத்தையும் அதன் தூரநோக்கான சிந்தனையையும் மக்கள் ஏற்றுக்கொண்டு அதன்வழி பயணிப்பதை சகித்துக்கொள்ளாத அமைப்புகளும் அரசியல்வாதிகளும் எம்மீது அதிக கெடுபிடிகளையும் அவதூறுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு எம்மை மக்களிடம் இருந்த தூக்கி எறிய நினைத்தபோதெல்லாம் அவர்களது நிறவேறான கனவுகளை மக்கள் நிராகரித்துள்ளனர்.

எமது வெளிப்படையான ஜனநாயகப் பாதையையே இன்று அனைத்து தமிழ் தரப்பினரும் கையிலெடுத்துள்ளனர். அந்தவகையில் நாம் மக்களது உரிமைக்காக பயணித்த பாதை வெற்றிகண்டுள்ளது. ஆனாலும் வழிமுறைக்கு வந்தவர்கள் நடை முறையில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். அதை விடுத்து அடுத்தவன் மீது அவதூறுகளை மட்டும் எப்படி திட்டமிட்டு பரப்பலாம் என்றும் அடுத்த தேர்தலில் எப்படி வெல்லலாம் என்றும் கணக்கு போட்டு பதவி அதிகார மோகத்தில் உறங்கிக்கிடப்பதும் ஆநாகரீகமான அரசியலாகும். இவ்வாறு தெரிவித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ந்தும் நாம் மக்களின் நண்பர்களாக மக்கள் நலன் சார்ந்து எமது இலக்கை நோக்கி தடைகள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியிலும் உறுதியுடன் செல்வோம் என்று தெரிவித்திருந்தார்.

 

DSC05094

Related posts:


ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்...
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...
வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றுத்தி...