நாடெங்கும் பாகுபாடின்றி பகிரப்படுகின்ற திட்டங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 7th, 2022

தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை திட்டத்திலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த  சுமார் 51 பாடசாலைகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் தி்ட்டத்திற்கு அமைய  1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றும் நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில்  இடம்பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் பளை மத்திய கல்லூரியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் நாட்டினை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் மாகாணப் பாடசாலைகளாக இருந்த 51 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

எனினும் இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்கும் இந்த மாகாண மக்களின் ஔிமயமான எதிர்காலத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அவற்றின் செயற்பாடுகள் அமைந்திருக்கும்.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமக்கான சந்தர்ப்பங்களாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தவகையில், தேசிய பாடசாலைகளாக மாற்றப்படுகின்ற எமது பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலைகள், தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்ற வளங்களை பயன்படுத்தி நகர்ப்புற பாடசாலைகளுக்கு நிகரான பாடசாலைகளாக தம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாடசாலையினுள் இன்று நுழைந்த போது, மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் கட்டிடம் கண்ணில் தெரிந்தது.  அந்த ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளும் சிறப்பாக இருப்பதை பின்னர் அவதானிக்க கூடியதாக இருந்தது. அந்த ஆய்வு கூடம் கடந்த காலத்தில் எமது ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படையில் மகிழ்ச்சியாக இருந்தது.

அதேபோன்று, தற்போதைய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி பகிர்ந்தளிக்கப்படுகின்ற திட்டங்களையும் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், நல்லாட்சி என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட முண்டாட்சி காலத்தில் எந்தவிதமான நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த ஆட்சிக் காலத்தில் வெற்று ஆலாபரணங்கள் மூலம் மக்களை ஏமாற்றியவர்கள், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயற்படுத்துகின்ற தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பது வேடிக்கையானது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: