நாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன? – டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி!

Tuesday, March 21st, 2017
 
நாடளாவிய ரீதியில் தற்போது பரவி வருகின்ற டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய் என்பவற்றுக்கு இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா? இவை அனைத்தும் ஒரே வகையான நோயா? என்பது குறித்து ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனா? அவற்றின் தற்போதைய நிலை என்ன? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம்(21) நாடாளுமன்றத்தில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர், மருத்துவக் கலாநிதி ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்த வருடத்தின் கடந்த 75 நாட்களில் நாடளாவிய ரீதியில் 21,541 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், இதுவரையில் இந் நோய் காரணமாக மரணித்தவர்களது எண்ணிக்கை 33 ஆகுமென்றும் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு – கிழக்கு உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இந் நோயின் தாக்கம் வர வர அதிகரித்துள்ள நிலையே காணப்படுகின்றது என்றும், குறிப்பாக, தற்போதைய நிலையில், கிண்ணியா பிரதேசத்தில் இந் நோய்க் காரணமாக இறப்போரது எண்ணிக்கை அதிகரித்து, அப்பகுதி ஆபத்து நிலையில் காணப்படுவதாகவும், கடந்த 15ஆம் திகதி முதல் அங்குள்ள பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருவதுடன், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அம் மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 90 வீதமான டெங்கு நோய்த் தொற்றாளர்கள் காணப்படுவதாகவும் தெரிய வருகிறது.
இதே நேரம், வடக்கில் தற்போது பன்றிக் காய்ச்சல் நோயும் பரவலாகப் பரவி வருகின்ற நிலையே காணப்படுகின்றது என்றும், குறிப்பாக வவுனியாவில் இதுவரையில் 22 பேர் இந் நோய் பீடிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ள நிலையில், கெப்பித்திகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 02ஆம் திகதி இறந்துள்ளதாகவும், இவர் குழந்தை பிரசவித்து ஓரிரு வாரங்கள் கழிந்த நிலையிலேயே இறந்துள்ளார் என்றும், குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களையும், சிறுவர்களையுமே இந் நோய் அதிகமாகத் தாக்கி வருவதாகவும், இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 10 கர்ப்பிணிப் பெண்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதன் பிரகாரம் வடக்கில் சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஆளாகியள்ளதாகவும், இவர்களில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் தெரிய வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுவாச நோய் தொடர்பில் நாளொன்றுக்கு சுமார் 1000 பேர் வரையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாகவும், இந்த வகையில் தற்போது சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் சுமார் 1000 பேர் வரையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
எனவே, வடக்கு, கிழக்கு உட்பட எமது நாட்டில் தீவிரமாகப் பரவி வருகின்ற டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், வடக்கு மாகாணத்திலே மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்ற பன்றிக் காய்ச்சல் நோயையும் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத்தில் இந் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது இந்நோய்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரவலாக இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கும், நீர் ஆகாரங்கள் வழங்குவதற்கும் வசதியாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண...
வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் ...
வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு ...