நவீன யுகத்திலும் முகவரியற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, September 19th, 2018

அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு, காணி உரிமைகளில் புறக்கணிப்பு, வீட்டு உரிமைகளில் புறக்கணிப்பு, சுகாதார, கல்வி வசதிகளில் புறக்கணிப்பு, கடிதம் வந்து சேர்வதற்குக்கூட ஒரு முகவரியற்ற மக்களாகவே மலையக மக்கள் இந்த நவீன யுகத்திலும் வாழ்ந்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகள் மற்றும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தொடர்பிலான சட்டமூலங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

1975ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட காணிச் சீர்திருத்த சட்டமானது அந்நியர் மற்றும் இந்நாட்டவர் வசமிருந்த அனைத்து தோட்டங்களையும் தேசியமயமாக்குவதற்கு உறுதுணையாக இருந்தது. அதுவரைக்கால தனியார் நிர்வாகத்தின்மீது மிகுந்த வெறுப்பினை அடைந்திருந்த இம் மக்கள், இதனை வரவேற்றனர் என்றே கூற வேண்டும். இதன் மூலமாகவேணும் தங்களுக்கொரு முகவரி கிடைக்கும் என்ற நம்பிக்கை அம் மக்களிடத்தே இருந்தது. ஆனாலும், அந்த நம்பிக்கையிலும் மண்ணையள்ளிப் போடுகின்ற ஏற்பாடுகளே பின்னர் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டன.

பெருந்தோட்டத்துறை சார்ந்திருந்த காணிகள், அச்சமூகம் சார்ந்திராத மக்களுக்கும், அரச நிர்வாகக் கட்டுமானங்களுக்கும் என பகிரப்படல் ஆரம்பமானது. அந்த வகையில் பார்க்கப் போனால் 1956ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு வந்திருந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த காணிகளை துண்டாடும் செயற்பாடுகளுக்கு இந்த தேசியமயமாக்கல் ஏற்பாடுகள் பெரிதும் துணை போயிருந்தன என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் 50 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக காணிகள் வைத்திருந்தோரிடமிருந்து மேலதிகக் காணிகள் சுவீகரிக்க்பட்டதன் காரணமாக, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தோற்றம் இடம்பெற ஆரம்பித்தது.

சுமார் 63 சத வீதமான காணிகளைக் கொண்டிருந்த அரச தரப்பு, அதற்கென நான்கு அரச நிறுவனங்களை உருவாக்கியது.  1976ஆம் ஆண்டு அரச பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை உருவாக்கம் பெற்றது. மேற்படி  நிறுவனங்களினிடையே ஏற்பட்டிருந்த நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, அரசப் பெருந்தோட்டக் கூட்டுத்தானம் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1992ஆண்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்டக் காணிகள் தனியாருக்கு குத்தகை அப்படையில் வழங்குகின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், அனைத்துப் பங்குகளும் 10 தனியார் நிறுவனங்களால் வாங்கப்பட்டு, 23 பிராந்திய நிர்வாகங்களின் பொறுப்பில் செயற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது.

தனியாருக்கு பெருந்தோட்டத்துறை காணிகளை குத்தகைக்கு விடுகின்றபோது, காணி உரிமத்தில் பெருமளவிலான பங்கு அரசு சார்ந்திருக்குமெனக் கூறப்பட்டிருந்த போதிலும், காணி உரிமங்களில் தனியார் நிறுவனங்கள் 30 சத வீதத்தையும், அரசு 6 சத வீதத்தையும் கொண்டிருக்கின்ற நிலையில், ஏனையவை அனைத்தும் சிறு தோட்ட உரிமையாளர்கள் வசம் இருப்பதாகவே  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கம் பார்க்கின்றபோது, 1976களில் பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக ஒதுக்கப்பட்டிருந்த 7,50,000 ஹெக்டயர்  நிலத்தில் 2,13,920 ஹெக்டயர் நிலத்தில் தேயிலைப் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இன்று அதில் சுமார் 32, 000 ஹெக்டயர் காணி எவ்விதமான பயன்பாடுகளும் இன்றி, காடு மண்டிக் கிடப்பதாவும் தெரிய வருகின்றது.

Related posts:

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்க...
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...