தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்களஸ் தேவானந்தா!

Thursday, November 23rd, 2017

தாம் கற்ற கல்விக்கேற்ற ஒரு தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய ஒரு கல்வி முறைமை உருவாக்கப்பட்டு அதன் மூலமாக இந்த நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.

இன்றைய தினம் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலம் தெரிவிக்கையில் –
எமது நாட்டில், எமது நாட்டுக்குப் பொருத்தமானதும், நவீன யுகத்திற்கு ஏற்ற – தொழில் துறைகள் நோக்கியதான கல்விக் கொள்கை நிலை இன்னும் முழுமைப்படுத்தப்படாத ஒரு நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கின்ற கல்வி முறைமையிலும் தமிழ் மொழி மூலமான கல்வியைக் கற்கின்ற மாணவர்கள், அரச பாடசாலைகளில் முகங்கொடுத்து வருகின்ற பின்னடைவுகள், புறக்கணிப்புகள் பற்றி பேசவேண்டிய துரதிர்ஸ்டவசமான நிலையிலேயே நாங்கள் இன்னும் இருந்து வருகின்றோம்.

வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் கல்வியில் வீழ்ச்சி! கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் கல்வியில் வீழ்ச்சி! மலையகப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் கல்வியில் வீழ்ச்சி! களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட ஏனைய தென் பகுதிகளை எடுத்துக் கொண்டால், தமிழ் கல்வி நிலையில் வீழ்ச்சி! இறுதியில் கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால், தமிழ் கல்விப் பகுதியே புறக்கணிப்பு!

இத்தகையதொரு நிலையில், நாங்கள் கதறி, கதறியாவது இந்த நாட்டில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கும் தரமான கல்வி வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்பதற்காகவும், இடைவிலகினாலும், அல்லது உயர் தரம் வரைச் சென்று பல்கலைக்கழக வாய்ப்புகள் இல்லாது போனாலும், அதுவரையில் தாம் கற்ற கல்விக்கேற்ற ஒரு தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய ஒரு கல்வி முறைமை உருவாக்கப்பட்டு அதன் மூலமாக இந்த நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும் முயற்சித்து வருகின்றோம்.

22 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது பொதுவான விதியாக இருக்கின்றது. இந்த விதி சில சிங்கள மொழி மூலமான பாடசாலைகளிலும் இல்லை, பல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் – சிலவேளை அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளிலும் இல்லை என்றே கூறவேண்டியிருக்கின்றது.

நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலமானப் பாடசாலைகள் பலவற்றில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்பப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. இத்துறைகள் சார்ந்து ஆசிரியர்களை உருவாக்கும் அளவுக்கு எமது கல்வித் திட்டங்கள் இல்லை!

வடக்கு மகாணத்தில் பலாலி ஆசியர் பயிற்சிக் கலாசாலையானது, இந்த நாட்டிலே பல பொறியியலாளர்களை, விஞ்ஞானிகளை, பேராசிரியர்களை, மருத்துவர்களை, கணக்காளர்களை உருவாக்குவதற்கான பங்களிப்பு பெருமை கொண்டது. இன்று அது எவ்விதமான பயனையும் பெறாத வகையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே இத்தகைய நிலைமைகள் எமது நாட்டின் துரதிர்ஸ்டத்திற்காக வலியவே வரவழைத்துக் கொள்கின்ற ஏற்பாடுகளாகவே இருக்கின்ற தேசிய அநியாயங்களாகும்.

கிழக்கு மகாணத்தில் 30 தேசிய பாடசாலைகளில் 28 தேசிய பாடசாலைகளில் தற்காலிக அதிபர்களே கடமையில் இருக்கின்றனர். இது தொடர்பில் நான் இந்த சபையிலே குறிப்பிட்டிருந்தேன். அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும், அரச சேவைகள் ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுவரையில் நடந்தது எதுவுமே இல்லை – என தெரிவித்துள்ளார்.

003

Related posts:


பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ...
யாழ் - கிளிநொச்சி காணிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய நகர்வு - அமைச்சர் டக்ளஸ் ஏற்பாட்டில் நாடாளுமன்...