தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான தேசிய நல்லிணக்கம் பலமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் – மேதின உரையில் டக்ளஸ் தேவானந்தா

Monday, May 2nd, 2016

பேசும் மொழியாலும், வழிபடும் மதங்களாலும் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்று வேறுபட்டு இருந்தாலும்  மக்கள் என்ற ரீதியிலும், உழைக்கும் மக்கள் என்ற ரீதியலும் நாம் ஒன்று பட்ட இலங்கையர்களே என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

காலியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நடத்திய மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே செயலாளர் நாயகம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவரது உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய நல்லிணக்கத்தை பலமானதாக கட்டியெழுப்பி, தேசிய இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த அரசியல் தீர்வானது, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அதற்கு பெரும்பான்மை சிங்கள மக்களும் இணங்குகின்ற வகையில் அமைய வேண்டும். அத்தகைய ஒரு தீர்வே நடைமுறைச் சாத்தியமானதாக அமையும்.

இதற்கு நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வும், அதனூடான நம்பிக்கையும் கட்டியெழுப்பப்பட வேண்டியதும் அவசியமாகும். அதற்கான வழிவகைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் செயற்பாடுகளின் மூலமாக எமக்கு ஏற்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க ஆகியோர் தேசிய நல்லிணக்கத்தை பலம்மிக்கதாக கட்டியெழுப்ப பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவே தெரிகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமை பெற்று, சுதந்திர பிரஜைகளாக வாழ வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.இதற்காக சிங்கள மக்களை நோக்கி எமது உறவுக்கரங்களை நாம் நீண்டகாலமாகவே நீட்டிவருகின்றோம்.

அந்த வகையில் வடக்கிற்கும், தெற்கிற்குமான சகோதரத்துவ உறவுப்பாலமாகவே நான் தொடர்ந்தும் செயற்பட விரும்புகின்றேன். அதனூடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப என்னாலான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்க முடியுமென நம்புகின்றேன்.

இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், தேசிய பொருளாதார அபிவிருத்தி மட்டுமன்றி இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து உழைக்கும் மக்களையும் தலை நிமிர வைப்பதற்கான சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காகவும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

Related posts: