தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை  தட்டிக்கழிக்கப்படுகின்றதா? – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, August 9th, 2016

தனிமனித பெருமைகளுக்காக அரசுடன் நெருக்கமாக உறவாடி இணக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பொய்யான வாக்குறுதிகள் வழங்கி தட்டிக்கழித்து வருவது ஏன் என்பதுதான் புரியவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பகுதியில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அவரது பதிவில் மேலும் பதிவிட்டுள்ளதாவது –

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னரும் அவர்கள் சாகும்வரையான உண்ணாவிரப் போராட்டங்களை முன்னெடுத்தபோது அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாக வாக்குறுதி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த வாக்குறுதிகளை இதுவரையிலும் நிறைவேற்றவில்லை.

புதிய அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றியதாக கூறிக்கொண்டு அரசுடன் இணக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தோடு இதுவரை எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை.

தமது விடுதலை தொடர்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரதிநிதிகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேச்சு நடத்துவதற்குச் சென்றிருந்தபோது அவர்களைக்; கணக்கில் எடுக்காமல் நாகரீகமற்றவகையில் அவர்களை கதைக்கவிட்டு, சம்பந்தன் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் வீடியோக்கள் வெளியாகி இருந்ததையும் தமிழ் அரசியல் கைதிகள் கண்டித்திருந்தனர்.

அவ்வாறு பொறுப்பற்ற தன்மையோடும், அக்கறையற்றும் செயற்படும் கூட்டமைப்பு, சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தாம் இணக்க அரசியல் நடத்தும் அரசாங்கத்துடன் உறுதியான பேச்சுக்களை நடத்த வேண்டும்.

தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதற்கான புறச்சூழலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்துவதில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதும் முக்கிய அங்கமாகும்.

சுய பதவிகளுக்காகவும், தனிமனித பெருமைகளுக்காகவும், அரசுடன் நெருக்கமாக உறவாடி இணக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பொய்யான வாக்குறுதிகள் வழங்கி தட்டிக்கழித்து வருவது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

Related posts:

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...