தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் வலியுறுத்தல்!

Friday, March 25th, 2016

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ள தமிழ் மக்களில் பலர் இன்னமும் அங்குள்ள முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பில் நான் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். எனினும், அம் மக்களது இன்னல்கள் இன்னும் தீரவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாகவே அண்மையில் ரவீந்திரன் என்பவரின் தற்கொலை இடம்பெற்றுள்ளது. எனவே, இம் மக்களின் இன்னல்களைத் தீர்க்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், 1983ம் வருடம் முதல் 2013ம் வரையிலான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 3,14,259 பேர் அகதிகளாக தமிழ்நாடு சென்றதாகவும், இதில் சுமார் 2,12,000 பேர் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை திரும்பியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இன்னும் 1,22,059 பேர் தங்கியிருப்பதாகவம் ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருக்கும் மக்களுக்கு, மாதாந்தம் ஆண்களுக்கென 1000 ரூபாவும், பெண்களுக்கென 750 ரூபாவும், குழந்தைகளுக்கு 400 ரூபாவும் என வாழ்வாதார உதவிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கொடுப்பணவுகள் போதுமானதாக இல்லாத நிலையில், இம் மக்களில் பலரும் வேறு பல கூலி வேலைகளிலும் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இம் மக்கள் இலங்கை வருவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இம் மக்கள் நாடு திரும்பும் வரை இம் மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பில் உதவும் வகையிலான திட்டமொன்றை இந்திய அரசுடன் இணைந்த ரீதியில் செயற்படுத்த இலங்கை அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அதே நேரம், புலம்பெயர் எமது உறவுகளும், மனிதாபிமானமுள்ள அனைவரும் இம் மக்களுக்கு தங்களால் இயன்ற வரையில் உதவிகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமெனவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: