தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, January 26th, 2021

பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்ட விரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானத்தா, தான் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தயவுதாட்சண்யம் காண்பிக்க கூடாது எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று(26.01.2021) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாய்த்தக் கூட்டத்திலேயே குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், மன்னார் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் தமது கடல் பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் சட்ட விரோதமான மீன் பிடித் தொழிலி்ல் ஈடுபடுவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாவட்டங்களுக்கான அனுமதிகளைக் கொண்டிருப்போர் பூநகரி கடல் பிரதேசத்தில் தொழில் ஈடுபடுவது தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடு கிடைத்து வருவதாகவும், அதேபோன்று, பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்தடை செய்யப்பட்ட தொழிற் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட  வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸார் ஆகிய தரப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாணடிய சட்ட விரோத செயற்பாடுகளினால் எமது இலங்கை கடற்றொழிலாளர்களும்   எமது கடல் வளமும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர்கள் நால்வர் உயிரிழந்த துன்ப சம்பவத்திற்கு அனுதாபத்தினை தெரிவிக்கின்ற போதிலும், எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

Related posts:


தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படும்: கிளிநொச்சி மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களு...