டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 10th, 2017

நுவரெலியா மாவட்டத்திலுள்ள டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், நுவரெலியா மாவட்டத்தில், அக்கரபத்தனை பகுதியைச் சேர்ந்த டொரிங்டன் தோட்டத்திற்குரிய, கல்மதுரை பிரிவின் 06ம் இலக்க தோட்டக் குடியிருப்பைச் சார்ந்த ஒரு குடியிருப்பானது அண்மைக் கால மழை காரணமாக தாழ்ந்து போயுள்ள நிலையில், அங்கு குடியிருந்து வருகின்ற 22 குடும்பங்களைச் சேர்ந்த  சுமார் 95 பேரினது நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

1926ம் ஆண்டுக் காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பு வீடுகளில் கடந்த காலங்களில் புனரமைப்புப் பணிகள் எதுவும் இடம்பெறாத நிலையில், இங்குள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதாகவும், இதனால் இம் மக்கள் பாரிய அச்ச நிலையிலேயே இரவு வேளைகளைக் கழித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மழை நீர் மற்றும் நீர்க் கசிவுகள் காரணமாக இக் குடியிருப்பு பகுதி தாழ்ந்துள்ளதாகவும் தெரிய வருகின்ற நிலையில், பாரிய ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்பதாக, இம் மக்களது குடியிருப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது.

எனவே, மேற்படி குடியிருப்பு தொடர்பில் உரிய அவதானம் செலுத்தி, அம் மக்களது நலன் கருதி அம் மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் ...
அரச ஒடுக்கு முறையைவிட அமெரிக்க அடக்குமுறை மக்களை கூண்டோடு அழித்துவிடும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....