சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தலால் தமிழ் சமூகமும் மாசடைந்துள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017

முன்பு எமது மக்கள் மத்தியில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. இன்று, சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டலால் எமது மக்களின் உழைப்பும் சிதைந்து, நம்பிக்கையும் சிதைந்து, எமது பகுதியின் சூழல் மாசடைந்திருப்பது போல், சமூகமும் மாசடைந்துள்ள நிலையினையே காணக்கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சூழல் மாசடைகின்ற நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிp;திருக்கின்றார்.  அந்த வகையில் எமது நாட்டில் சூழலானது மிகவும் துரிதப் போக்கில் மாசடைச் செய்கின்ற காரணிகளைக் கொண்டதான மாகாணங்களில் வடக்கு மகாணமே முதன்மை வகிக்கின்றதொரு நிலைமையே காணப்படுகின்றது.

நாளாந்த தமிழ் ஊடகங்களைப் பார்க்கின்றபோது, வடக்கில் சூழலுக்கு பாதகம் ஏற்படுத்துகின்ற ஓரிரு செய்திகளையாவது காணக்கூடிய அளவிற்கு நாளாந்தம் எமது பகுதிகளில் அதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இது, இந்த அரசின் தவறா? அரச அதிகாரிகளின் தவறா? அல்லது, எமது மக்கள் தெரிவு செய்திருக்கின்ற அரசியல் பிரதிநிதிகளின் தவறா? அல்லது, எமது மக்களின் துரதிர்ஸ்டவசமான நிலைமையா? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

வடக்கு மாகாணத்திலே இருக்கின்ற மாவட்டங்களின் பொருளாதார வளங்கள் யாவும், சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் அபகரிக்கப்பட்டு, பிற மாவட்டங்கள் நோக்கி நகர்த்தப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியும், முல்லைத்தீவும், யாழ்ப்பாணமும் ஏன் இன்று வறுமை மிக அதிகம் கொண்ட மாவட்டங்களாக தள்ளப்பட முடியாது? என்றே கேட்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

01101404

Related posts:


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்...
தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...