சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம் – இரங்கல் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 25th, 2016

சிங்கப்பூரை செதுக்கிய சிற்பிகளில் ஒருவராக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு சிங்கப்பூர் மக்களுக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் ஒரு பெரும் துயரம் நிறைந்த செய்தியாக அமைந்துள்ளதுடன் அவரது இழப்பு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பு குறித்த துக்கத்தில் சிங்கப்பூர் மக்களுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள இரங்கல் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இரங்கல் செய்திக்குறிப்பில் –

சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்காக உதித்த உன்னதமான தலைவர்களுள் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனும் ஒருவர். அவரின் மறைவு அவரது தேசத்துக்கு மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

கடந்த 1999ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகம் முழுவதும் பொருளாதார தேக்கநிலை காணப்பட்டது. இருந்தும் தனது திறமையால் அதிலிருந்து சிங்கப்பூரை மீட்டு வளர்ச்சியின் உச்சப்பாதைக்கு நாட்டை வழிநடத்தினார். இதன் காரணமாக 2005ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இத்தகைய சிறப்பியல்பு கொண்ட அவரது உழைப்பும் ஆற்றலும் போருக்குப்பின்னரான எமது தேசத்தை கட்டியெழுப்பவதற்கு ஒர் ஆத்மார்த்தமான நம்பிக்கையையும் வழிகாட்டலையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தது.

எமக்கு ஒரு முன்னோடியாக இருந்து எவ்வாறு நாம் மீண்டெழவேண்டும் என்ற நம்பிக்கையை ஊட்டிய அவரது இழப்பு எமது தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என தெரிவித்த அவர் சிங்கப்பூரின் சிற்பிகளில் ஒருவராக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின்  மறைவு குறித்த துக்கத்தில் உறைந்துள்ள சிங்கப்பூர் மக்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்...
ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வ...
யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதமரின் இந்து மத விவகார இணை...

நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்...