சவால்களை எதிர்கொள்பவர்களாக பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் – சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Thursday, March 7th, 2019

பல வழிகளிலும் பிரச்சினைகளை சந்தித்து சமூகத்தில் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை வறுமையிலிருந்தும், சமூகத்தின் பிற்போக்குத்தனமான பரிகாசங்களிலிருந்தும் மீண்டுவர செய்வதும், அவர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுமே எமது கடமையாகும். பெண்கள் சவால்களை வெற்றிகொள்வார்களாக வாழும்  சூழலைத் தோற்றுவித்து பெண்கள் தினத்தை அர்த்தமுள்ளதாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது –  

வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் 75ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மீளமுடியாத வறுமைக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது தவிரவும் நுண்கடன் திட்டத்தில் அகப்பட்டு அதை மீளச் செலுத்தும் சுய பொருளாதார வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் கடனை கட்டமுடியாமல் நாளாந்தம் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு சூழலிலேயே இம்முறையும் சர்வதேச பெண்கள் தினம் நம்மைக் கடந்து செல்கின்றது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத வாழ்க்கைச் சூழலில் அவர்கள் நிரந்தர அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் வறுமையைப் போக்கவும், அவர்களின் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தவும் அரசோடு சுயலாப இணக்க அரசியல் நடத்தும் அரசியல் தலைமையானது இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்கள், அரசு வழங்கும் வரப்பிரசாதங்கள், உதவித் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

இவ்வாறு பல வழிகளிலும் பிரச்சனைகளை சந்தித்து சமூகத்தில் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை வறுமையிலிருந்தும், சமூகத்தின் பிற்போக்குத்தனமான பரிகாசங்களிலிருந்தும் மீண்டுவரச் செய்வதும், அவர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுமே எமது கடமையாகும். பெண்கள் சவால்களை வெற்றிகொள்பவர்களாக இருக்கும் சூழலைத் தோற்றுவித்து பெண்கள் தினத்தை அர்த்தமுள்ளதாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

பெண்கள் அரசியல் மற்றும் சமூக பொருளாதார திட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பெண்கள் தமது ஆளுமை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு தமது குடும்பத்திற்கும், தாம் சார்ந்த சமூகத்திற்கும் வழிகாட்டும் தலைமைத்துவம் வழங்குகின்றவர்களாக வளரவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அந்த செய்திக் குறிப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: