சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, February 11th, 2019

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்நேரத்திலும் தேர்தல்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனாலும் அந்த தேர்தல்களில் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்ற கேள்வியே மக்களிடம் காணப்படுகின்றது. அந்தவகையில் எந்தத் தேர்தல் வந்தாலும் வடக்கு கிழக்கில் எமது கட்சி தனித்துவத்துடன் முகங்கொடுக்க தயார் நிலையிலேயே இருக்கின்றது  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய கூட்டம் இன்று (11) கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போது அரசியல் கட்சிகளின் தேசியக் கூட்டு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அந்த கூட்டு தென்னிலங்கை அரசியல் நிலைமைகளுக்கேற்பவே அமையவுள்ளது. நாம் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கில் எமது கட்சி தனித்துவத்துடனேயே முகங்கொடுக்கவுள்ளது.

இவ்வாறு தேர்தல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் நாம் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்படாமல் மக்களின் நலன்கள் மற்றும் முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது.

கடந்த காலங்களில் நாம் அரசுடன் மேற்கொண்ட இணக்க அரசியலினூடாக வியத்தகு அபிவிருத்திப் பணிகளை மட்டுமல்லாது பல்வேறு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களையும் முன்னெடுத்து சாதித்து காட்டியுள்ளோம்.

இவ்வாறு கடந்த காலங்களில் நாம் ஆற்றிய பணிகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் அவர்கள் எவ்வாறு தவறவிட்டார்கள் என்ற விடயங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது அவசியமானது.

அவர்களால் முன்னெடுக்காமல் போன விடயங்கள் தொடர்பாகவும் கிடைக்கப்பெற்றதான சந்தர்ப்பங்களையும் சரியான முறையில் பயன்படுத்தாத அவர்களது ஆற்றாமை மற்றும் அக்கறையில்லா தன்மைகள் தொடர்பாகவும் மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளமையானது எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என நான் நம்புகிறேன்.

அதுமாத்திரமன்று மக்கள் நலன்சார்ந்து உழைத்த நாம் துரோகிகளாக இருந்தால் மக்கள் நலன்சார்ந்து உழைக்காமலும் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்காமலும் இருப்பவர்கள் துரோகிகள் இல்லையா என்றும் செயலாளர் நாயகம் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாம் எக்காலத்திலும் அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்தவர்கள் அல்லர். அரசிடம் சரணாகதி அடைந்தவர்கள் யார் என்பது தற்போது மக்களுக்கு தெட்டத்தெளிவாக  வெளிப்பட்டுள்ளது என்றும், அந்தவகையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது வழிமுறைக்கு வந்திருந்தபோதிலும் எமது பொறிமுறைக்கு அவர்கள் வரவில்லை என்பதைத்தான் நான் எப்போதுமே சுட்டிக்காட்டி வருகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது - செயலாளர் நாயகம் ...
முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைம...
கிடைத்திருக்கும் அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பு...