சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Wednesday, November 30th, 2016

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் பாரிய பாதிப்புக்களையும், இழப்புகளையும் சந்தித்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில். எமது மக்களின் வாழ்க்கை நிலையை மீளக் கட்டியெழுப்பும் முகமாக பல்வேறு நிவாரணத் திட்டங்களைத் தொடர வேண்யுள்ளது என்பதுடன் வாழ்வின் எழுச்சி மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களை மேலும் இப்பகுதிகளில் அதிகளவில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும்  நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் இந்த வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரி அமைச்சு தொடர்பில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கரத்து தெரிவிக்கையில் –

ஏனைய பல அமைச்சுக்களின் பல்வேறு செயற்திட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரந்தளவில் முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதைப் போல், இந்த அமைச்சின் செயற் திட்டங்களையும் பரந்த அளவிலும், அதிகளவிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

எனவே, இது தொடர்பில் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்கள் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் ஏற்கனவே நேரடி விஜயம்  மேற்கொண்டு, அங்குள்ள எமது மக்களின் நிலைமைகளை அறிந்திருக்கிறார் என நான் நினைக்கிறேன்.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் பாரிய பாதிப்புக்களையும், இழப்புகளையும் சந்தித்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அந்த வகையில். எமது மக்களின் வாழ்க்கை நிலையை மீளக் கட்டியெழுப்பும் முகமாக பல்வேறு நிவாரணத் திட்டங்களைத் தொடர வேண்யுள்ளது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே, வாழ்வின் எழுச்சி மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களை மேலும் அதிகளவில் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை இங்கு அவதானத்தில் கொண்டு வர விரும்புகின்றேன்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தற்போது சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் குடும்ப எண்ணிக்கை  53,840 ஆக இருக்கும் நிலையில், சமுர்த்தி நலனுதவி இதுவரை கிடைக்காமல் வறுமை காரணமாக 41,421 குடும்பங்கள் அந்த உதவியை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளனர்.

அதே நேரம், சமுர்த்தி உதவியை கிளிநொச்சி மாவட்டத்தில்  11,740 குடும்பங்கள் பெற்று வருகின்ற நிலையில், மேலும் 16,640 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 11,105 குடும்பங்கள் பெற்று வருகின்ற நிலையில், 12,266 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 13,166 குடும்பங்கள் பெற்று வருகின்ற நிலையில், 14,000 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர். அதே நேரம், வவுனியா மாவட்டத்தில் 11,956 குடும்பங்கள் பெறுகின்ற நிலையில், 16,004 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதே போன்று, கிழக்கு மாகாணத்திலும் மேலும் சமுர்த்தி நலனுதவி கொடுப்பனவை எதிர்பார்த்த நிலையில் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்து இருக்கின்றன என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

எனவே, சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களின் ஆய்வு முடிவுகளை விரைவில் வெளிப்படுத்தி தகுதியான குடும்பங்களுக்கு விரைவில் இந்த நலனுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவுதொகையாக  1,500 ரூபா பெறும் மாணவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு பிரதேச செயலர் பிரிவில் உள்ள சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களில் உயர்தரம் பயிலும் பிள்ளைகள் உள்ள குடும்பங்களை இலக்காகக்  கொண்டு, அக்குடும்பங்களில் 30 வீதமானோருக்காவது புலமைப்பரிசில் உதவு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் வாழும் குடும்பங்கள் மற்றும் மிகவும் நலிவுற்ற குடும்பங்களை இலக்காகக் கொண்டு 90 வீத மானிய அடிப்படையிலான கருத்திட்ட உதவிகளுக்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், கனரக வாகனங்கள் ஓட்டுதல், இலத்திரனியல் உபகரணங்களைத் திருத்துதல், உணவு பதனிடும் முறைகளை அறிந்துகொள்ளல் போன்ற தொழிற் பயிற்சிகள் தொடர்பில் சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற 80 வீதமான உதவு தொகை பெறுவோரின் எண்ணிக்கையினை சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றும், சமுர்த்தி அதிகாரசபையானது, வாழ்வின் எழுச்சித் திணைக்களமாக மாற்றமுற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை என்றும், பொருத்தமான சம்பளக் குறியீடு வழங்கப்படவில்லை என்றும், பதவி உயர்வுகளுக்கான வழிகாட்டல்கள் வெளிப்படுத்தப் படவில்லை என்றும், ஆளணிப் பற்றாக்குறை காரணமாக பதில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிய வருகிறது.

எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு  மாவட்டங்;களிலும், மன்னார் மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சில பகுதிகளிலும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் 2012ம் ஆண்டின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சமுர்த்தி வங்கிகளில் பொதுவான கடன் நிபந்தனைகள் நியமங்கள்,  அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உடனடியாகக் கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் இல்லை.

குறிப்பாக, ஆரம்பத்தில் 25,000 ரூபாவினைக் கடனாகப் பெற்று தொழில் முயற்சியை விருத்தி செய்தல் போதுமானதாக இல்லை. எனவே, இத்தகைய வாழ்வாதாரம் தேவைப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு இத்தொகையை குறைந்த பட்சம் 50, 000 ரூபாவாக  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-1 copy

Related posts:

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மு...
காணாமல் போனோர் அலுவலகங்கள் மீது நம்பிக்கை இல்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
இறால் பிடிப்பு தொழிலை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகண்டு தாருங்கள் - டக்ளஸ் எம்.பியிடம் ...