சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானத்துக்கான யாத்திரையை தேசிய ரீதியில் புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை ஐயப்பசாமி பக்தர்கள் சந்தித்து தாம் சபரிமலை யாத்திரையின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கியிருந்தனர். இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
குறித்த யாத்திரையை புனித யாத்திரையாக மாற்றுவது மட்டுமல்லாது குறித்த காலப்பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை இலகுபடுத்தித் தருவதுடன் குறைந்த செலவில் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டுவருகின்றேன். அதுமட்டுமல்லாது இந்தியாவில் சென்று பக்தர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அவர்களது தங்குமிட ஏற்பாடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.
இதனிடையே வவுனியா பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், ஶ்ரீராமபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளைப்பெற்றுத் தருமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக வீடமைப்பு, வீதிபுனரமைப்பு, மின்சாரம், மலசலகூடம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தமது பகுதிகளில் காணப்படுவதாகவும் இவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி காலக்கிரமத்தில் தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|