சதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித குலத்துக்கே ஆபத்து – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

காணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை நிரப்புதல் என்றே கூறப்படுகின்றது. சதுப்பு நிலங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியவசியமானவை என்பதற்கிணங்கவே பாழாகிப் போகின்ற அல்லது அழிக்கப்படுகின்ற சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கின்ற வகையில் ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 1971ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி சர்வதேச மகா நாடு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டின் இறுதியில், உலகம் முழுவதிலும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் பரப்புவது என்ற முடிவு எடுக்கப்பட்டு, இதற்கென உள்ளூர் மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதை வலியுறுத்துகின்ற ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது.
ராம்சார் பிரகடனம் என்கின்ற இந்த உடனபடிக்கையை இலங்கை உட்பட சுமார் 168 நாடுகள் ஏற்றுக் கொண்டன.
அத்தகைய சதுப்பு நிலங்களை நிரப்புகின்றமையானது சில நேரங்களில் தவிர்க்க முடியாது என்ற போதிலும் அதுவே பாரியதொரு இழப்பாகவும் அமைந்து விடுகின்றது.
பராமரிப்பின்றி மாசடைதல், குப்பைகளைக் கொட்டுதல், ஒழுங்கான திட்டமிடல்கள் இன்மை காரணமாக கழிவு நீர் கலத்தல், கடல் நீர் உட்புகுதல், அதிகரிக்கின்ற குடியிருப்புகள் காரணமாக சதுப்பு நிலங்கள் மாசடைகின்ற அதேவேளை இது மனித சமூகத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்து விடுகின்றது.
இத்தகைய சதுப்பு நில மாசடைவுகள் திட்டமிடப்படாமலும், வெகுவாகத் திட்டமிட்டும் நிகழ்த்தப்படுவதையும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, இந்த காணி மீட்டல் என்பதை தனக்கான காணி மீட்டலாகக் கருதிக் கொள்கின்ற சில அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டே அதனை மாசடைச் செய்து, அதன் மூலமாகவே அதனை நிரப்பி, பின்னர் படிப்படியாகக் கையகப்படுத்துகின்ற சம்பவங்கையும் நாம் கண்டு வருகின்றோம். உதாரணத்திற்கு கொழும்பை அண்டிய முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதியைக் கூறலாம்.
கொழும்பு நகரைப் பொறுத்தவரையில், தற்போது சுமார் 19 கிலோ மீற்றர் சதுப்பு நிலங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. 1980களில் காணப்பட்ட சதுப்பு நிலங்களில் இன்று வரையில் சுமார் 60 வீதமான சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகின்றது.
இந்த சதுப்பு நிலங்களின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், அதிக மழை வீழ்ச்சியின்போது பெறப்படுகின்ற நீரை உள்வாங்கி வெள்ளம் வராமல் தடுக்கி;றது. அவ்வாறு உள்வாங்குகின்ற நீரை நன்னீராகவே பயன்பாட்டுக்கு நிலக் கீழாகத் தருகின்றது. உள்ளக காற்றின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துகின்றது. உலக வெப்ப நிலை சீர்பாட்டுக்கான காபனை சேமிக்கின்றது. இப்படி இன்னும் பல நன்மைகள் கிட்டுகின்றன.
மேற்படி சதுப்பு நில அழிப்புக் காரணமாக கொழும்பு நகரில் கடும் மழைப் பொழிவுகளின்போது, நகரமே மூழ்கிப் போகின்ற நிலைமையை இன்றும்கூட கண்டு வருகின்றோம்.
இன்றும்கூட எஞ்சி இருக்கின்ற சதுப்பு நிலங்கள் தரம் குன்றி வருவதால், அவற்றினால்கூட நாளடைவில் நாம் எவ்வித நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்றே கருத வேண்டி இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் இலங்கை காணி மீட்டல் அபிவிருத்தி அதிகார சபை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|