கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தது என்ன? – ஒரு பார்வை!

Tuesday, August 25th, 2020

இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற அடிப்படையில் தன்னுடைய செயற்பாடுகளை நேற்று 24.08.2020 ஆரம்பித்தார்.

அமைச்சரின் நேற்றைய கிளிநொச்சி விஜயத்தின் முதலாவது நிகழ்வாக, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் முன்னாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்டத்தின் திட்டப் பணிப்பாளர் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கரைச்சிப் பிரதேச செயலக பிரிவை, கரைச்சி மற்றும் அக்கராயன் என இரு பிரிவுகளாகப் பிரித்தல், மாவட்டத்தில் இரண்டு கல்வி வலயங்களை உருவாக்குதல், கரைச்சிப் பிரதேச சபையின் ஒரு பகுதியை நகரசபையாக்குதல், கண்டாவளை மற்றும் கரைச்சிப் பிரதேசசபைகளை தனித்தனிப் பிரதேச சபைகளாகப் பிரித்தல் உள்ளிட்ட அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய நிர்வாகக் கட்டமைப்பு மாற்றங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக முன்னதாக ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மக்களைப் பொறுத்தவரையில், அரச காணிகளில் குடியிருப்பவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல் விடுத்தார்.

குறிப்பாக விவசாயம் மற்றும் நெற்பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படும் காணிகள் விடயத்தில் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்து விவசாய உற்பத்திகள் தடைப்படாடத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தின் வேலையற்ற இளைஞர்-யுவதியருக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு, அரசாங்க வேலைவாய்ப்புக்களுக்கு மேலதிகமாக புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை தேசிய பொருளாதார வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு வலியுறுத்தினர்.

இதற்கு மேலதிகமாக, நுண்கடன் நிதியளிப்பு முறையிலான் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு புதிய தேசியக் கொள்கையின் அடிப்படையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல், சட்டவிரோத மண் அகழ்வு, காடழிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், காடுகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி பாவனையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

வெளிமாவட்டங்களிலிருந்து கள்ளு இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, உள்ளூர் பனை-தென்னைவள அடிப்படையிலான  கள்ளு உற்பத்தியை ஊக்குவித்து, அதுசார்ந்த தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவது தொடர்பாக இதில் விசேட கவனமெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென அதிகரித்திருக்கும் யானைத் தொல்லையைக் கட்டுப்படுத்த வேலிகள், அகழிகள் அமைப்பது தொடர்பாகவும், விவசாயத்துக்குப் பாதிப்பேற்படுத்தும் குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில், 2014ம் ஆண்டு முன்மொழியப்பட்டு ஆட்சி மாற்றத்துடன் கைவிடப்பட்ட, அறிவியல் நகரை மையப்படுத்திய ”கிளிநொச்சி பல்கலைக்கழக நகர அபிவிருத்தி” திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான ஏதுக்களை ஆராயுமாறு மாநாட்டில் கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தினார்.

இதற்கு மேலதிகமாக, கிளிநொச்சி மாவட்டச் செயலக கட்டட இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்தல், பேருந்து நிலைய அபிவிருத்தி, பொதுச்சந்தைக் கட்ட அபிவிருத்தி, சகல வசதிகளையும் கொண்ட பொது நூலகம் அமைத்தல், சர்வதேச விளையாட்டரங்கு அபிவிருத்தி, உரக்களஞ்சியம், நெற்களஞ்சியம் ஆகியவற்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் இங்கு ஆராய்ந்து உரிய பணிப்புரைகளையும் விடுத்தார்.

பிரதேசத்தின் சுற்றுலாத்துறை ஈர்ப்பு மையங்களை உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல், மேய்ச்சல் தரைகளை உருவாக்குதல், பால்சார் உற்பத்திகளை மேம்படுத்தல் உள்ளிட்ட ஏனைய பல முக்கிய விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஆணைவிழந்தான், ஜெயபுரம், பூநகரி நான்காம் கட்டை ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் அவர்கள் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் உடனடியாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...
கிழக்கு மக்களின் பேரம் பேசும் பலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் - அம...
நவராத்திரியை முன்னிட்டு பிரதமரால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலைகள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களா...

வடக்கில் கிராம சேவை யாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்கவும்! நாடாளுமன்ற உறுப்ப...
நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...