சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை !

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை அண்மையில் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் அவர்களுடன் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடு அண்மைய நாட்களாக குறைவடைந்துள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறித்த எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் செயற்பாடுகள் அவதானிக்கப்படுமாயின், அதற்கெதிராக வடக்கு கடற்றொழிலாளர்கள் ஜனநாயக வழியில் தமது அதிருப்தியை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களினால் பாதிப்புக்களை எதிர்கொண்ட வட பகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதறனகான பல்வேறு உதவித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ள நிலையில், முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் கட்டங்கட்டமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி கடற்றொழில் திணைக்களதனதினால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பகுதி கடற்றொழிலாளர்களுக்கான மனிதாபிமான உதவிப் பொதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(01.04.2022) பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் இன்னும் சில வாரங்களில் கட்டுப்பாட்டு்க்குள் கொண்டு வரப்பட்டு விடும் என்று நம்பிக்கை வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர், எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பதைப் போன்று தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பாடாது எனவும் தெரிவித்தார். – 01.04.2022
Related posts:
|
|