கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு தொடரும் – அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து!

Thursday, October 20th, 2022

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டம்  கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், “சில மாதங்களுக்கு முன்னர், எதிர்கால ஜனாதிபதி பற்றிய கேள்விகள் நாட்டில் தோன்றிய போது, பலரும் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில்,  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தப் பொருத்தமானவர் என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம்.

அத்துடன் அவரை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றுவதற்காக வெளிப்படையாக பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தோம். அன்றைய நாட்களில் எம்மால் முன்வைக்கப்பட்ட  கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவற்றுள் ஒன்றான அரசியல் கைதிகள் தொடர்பாகவும் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை தற்போது கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்ற ஜனாதிபதி, தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பான ஏனைய விடயங்களிலும் ஆரோக்கியமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: