கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெரிவிப்பு

Tuesday, February 28th, 2017

விமானப் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்த காணி மீட்புப் போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த 29 நாட்களாகத் தொடர்ந்து வீதியில் நின்று மக்கள் போராடிவந்த நிலையில், அந்தக் காணிகளை விட்டு விமானப்படையினர் வெளியேறி, காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள செய்தி எனக்கு மட்டுமன்றி மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

குடியிருப்பு காணிகளில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் வெளியேற்றப் படுவதற்கான உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளமை தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில், காணிகளை மீட்டுத்தருவதாக வாக்குறுதி வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி தமக்கான பல்வேறு வசதிகளை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளபோதும், புதிய அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், படையினர் வசமிருக்கும் தமிழ்மக்களின் காணிகளைப் பெற்றுக்கொடுக்க எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை.

தமிழ்மக்களுக்கு வாக்குறுதியை வழங்கியபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படையினர் வசமிருக்கும் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்கும் பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் நடத்தியிருந்தால், கேப்பாபுலவு மக்கள் பனியிலும், வெயிலிலும் குடும்பம் குடும்பமாக ஒருமாத காலம் போராடியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எனவே தற்போது கேப்பாபுலவு மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எவரும் உரிமைகோர முடியாது. இது அந்த மக்கள் வீதியில் இறங்கி போராடிப் பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றியாகும்.
அந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் விரைவாக குடியேறுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை அரசு முன்னெடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Untitled-2 copy

Related posts:


நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவி...
கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரத...