குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கோரிக்கை!

Thursday, November 30th, 2017

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் குடிநீருக்கான தட்டுப்பாட்டினை மிகவும் அதிக நிலையிலேயே காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் சுத்தமான குடிநீர் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டே வருகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் நீருக்கான தட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்தே வந்துள்ளன. அந்தவகையில் பார்க்கின்றபோது இன்னும் 5 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் சுத்தமானக் குடிநீர் இல்லாமல் போகின்ற அபாய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகப் புவியியல் பேராசியர் செனவி எல்விட்டவத்த அவர்கள் தனது ஆய்வுகளிலிருந்து தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் முழுவதிலுமாகவுள்ள சுண்ணாம்புத் தட்டுகள் கரைய ஆரம்பித்துள்ளன என்றும் அதன் காரணமாக அவை கடலுக்குள் செல்வதனால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்கப்படுகின்றது என்றும் தெரிவித்திருக்கின்ற அவர், யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில் யாழ் குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்து எச்சரித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்து மக்கள் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 – 15 கிலோ மீற்றர்களை தாண்டிய தூரங்களில் இல்லை. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கின்ற கிணறுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவை உவர் நீர் கலந்தே காணப்படுகின்றன.

குறிப்பாக யாழ் குடாநாட்டில் ஒரு சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத் தோற்றத்தில் ஒரு அம்சமாக தரைக்கீழ் நீரோட்டங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் நிலாவரைக் கிணறு குரும்பசிட்டி பேய்க் கிணறு புன்னாலைக்கட்டுவன் குளக் கிணறு கீரிமலைக் கேணி அல்வாய் மாயக்கைக் குளம் கரவெட்டி குளக் கிணறு ஊறணிப் பகுதி கிணறுகள் யமுனா ஏரி என்பன இத்தகைய நீர் நிலைகளாகும் என்றே தெரிய வருகின்றது. தற்போது இந்த நீர் நிலைகள் விவசாயச் செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேம்பாட்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் இங்கிருந்து கிடைக்கின்ற நீரைக் குடிநீராகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் உண்டென்றே கூறப்படுகின்றது.

தற்போதுள்ள நன்னீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், உவர் நீர்த் தடுப்பு அணைகள் அமைக்கப்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது. நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஐந்து திட்டங்கள் துறைசார் நிபணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதன் பிரகாரம் யாழ் குடாநாட்டின் நீரேரிகளில் கடல் நீர் உட்புகுதலைத் தடுப்பது ஒரு முக்கிய செயற்திட்டமாக இருக்கின்றது.  அந்த வகையில் வல்லை நாவற்குழி மற்றும் சுண்டிக்குளம் போன்ற நீரேரிகளில் இத் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது.மேற்படி நீரேரிகளை ஆழப்படுத்தி மழை நீரினைத் தேக்கக்கூடியதான தரைத்தன்மையினை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் தரையினில் மழை நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கென தற்போது இருக்கின்ற சிறிய நடுத்தர மற்றும் பெரிய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கற்கள் கரைசலால் ஏற்பட்டுள்ள சுமார் 1050 குளங்கள் காணப்பட்டபோதிலும் அவை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக்கப்பட்டு முழுமையான புனரமைப்புகளுக்கு உட்படுத்த வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. மேலும் வீடுகள் தோறும் மழை நீரினைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகளும் அதற்கான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன.

மக்களுக்குத் தேவையான குடிநீரினை விநியோகிப்பதற்கு பொதுவானதும் பொருத்தமானதுமான நீர் விநியோக நடைமுறைத் திட்டமொன்றைச் செயற்படுத்தி அதனைத் தொடர வேண்டியுள்ளது.

நிலக்கீழ் நீர் மாசடைதலைத் தடுக்க வேண்டியுள்ளதுடன் பொதுவான கழிவகற்றல் பொறிமுறையினை வலுவுள்ள வகையில் திட்டமிடப்பட்டு செயற்படுத்த வேண்டியுள்ளது.

மேலும் நிலக்கீழ் நீரைக் கடலில் கலக்கின்ற குகை வழிகளை யாழ் குடாநாட்டில் பல பகுதிகளிலும் காண முடிகின்றது. எனவே மேற்படி குகை வழிகள் இனங்காணப்பட்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட்டு தடுக்கின்ற ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன.

மேலும் கடல் நீரேரிகளை நன்னீராக்குகின்ற  திட்டத்தின் மூலமாக யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதுடன் வீணாக கடலில் கலக்கின்ற நீரானது நிலக்கீழ் நீரின் மீள் நிரப்பியாக மாறும் நிலைமைகள் ஏற்படும். இதன் காரணமாக நிலக்கீழ் நீர்வில்லைகள் சிதைவடைந்து போகாது தொடராகவே இருக்கும் நிலையில் நிலக்கீழ் நீர் உவராகும் நிலைமையானது போதியளவு குறைவடையும். யாழ் குடாநாட்டின் நிலப்பரப்பில் நன்னீர் பரப்பின் அளவு அதிகரிக்கும்.

அந்த வகையில் ஆனையிறவு மேற்குக் கடல் நீரேரி ஆனையிறவு கிழக்குக் கடல் நீரேரி உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடல் நீரேரி போன்ற திட்டங்கள் மிக முக்கியமானவையாகும். மேலும் இலகுவாகவும் அதிக செலவுகளின்றியும் சில நீரேரிகளையும் நன்னீர் ஏரிகளாக மாற்றக்கூடிய சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. குறிப்பாக மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக யாழ் நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும்.

இத்தகையத் திட்டங்கள் அனைத்துமே பல காலமாக ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை செயல்வடிவம் பெறாத காரணத்தினாலேயே இன்று யாழ் குடாநாட்டிற்கு நீர் தொடர்பில் இத்தகைய அபாயம் ஏற்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு தொடக்கம் 1953ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தொண்டைமானாற்றிலும் அரியாலையிலும் தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவை மரத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிர்மாணிப்புகள் என்ற வகையில் பிற்காலத்தில் அவை சேதமாகிவிட்டுள்ளன. எனவே மேற்படி அணைக்கட்டுகள் மீள அமைக்கப்பட வேண்டியுள்ளன. இவ்வாறு அமைக்கப்படுகின்ற தடுப்பு அணைகள் இரண்டு அடுக்குகளாக அமைய வேண்டியதும் அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அத்தகைய நிலையில்தான் வரட்சிக் காலங்களில் கடல் நீர் நிலக்கீழ் செல்வதைத் தடுக்க இயலும். ஆனையிறவு ஏரியிலும் இத்தகைய ஏற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டியது அவசியமாகவுள்ளது.

மேலும் சுண்டிக்குளம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள  தடுப்பு அணையும் மேலதிக நீரை வெளியேற்றுகின்ற பொறிமுறையும் சேதமடைந்துள்ளதால் அவற்றை மீளப் புனரமைப்புச் செய்யப்பட வேண்டியத் தேவை எற்பட்டுள்ளது.

ஆனையிறவு நன்னீர் ஏரியை முள்ளியான் கால்வாய் மூலமாக வடமராட்சியின் தென் பகுதியுடன் இணைக்கின்ற செயற்திட்டமும் இன்னும் பூர்த்தி செய்யப்படாதுள்ள நிலையில் அதனை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டியத் தேவை உள்ளது.

நாவற்குழி தடுப்பு அணையும் மீளத் திருத்தி அமைக்கப்பட தேவையில் இருக்கின்றது. அத்துடன் உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.

அதே போன்று நீர் சேமிப்புத் திட்டங்களை வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய எற்பாடுகளின் மூலமாக யாழ் குடாநாட்டினை தற்போது அச்சுறுத்தி வருகின்ற நீருக்கான தட்டுப்பாட்டினைப் போதியளவு தீர்க்க முடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈம க்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் பிராந்திய அபிவிருத்தி அபிவிருத்திப் பணிப் பொறுப்பு  நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts:


ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பார...
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச...
கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று கண்காணித்த அமைச்சர் டக்ளஸ்!