காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கு அரச காணிக் கொள்கை ஒன்று அவசியம் – மன்றில் டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Friday, November 24th, 2017

அரசியல் சூழ்நிலைகள், அச்சுறுத்தலான பின்னணிகள், நிச்சயமற்ற எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் தமது காணிகளை, கட்டிடங்களை மிகவும் குறைந்த விலைக்கு வேறு இனத்தவருக்கு விற்ற, அல்லது அச்சுறத்தல்கள் காரணமாக கைமாற்றம் செய்விக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தில் எவ்விதமான தீர்வுகளும் இல்லை – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஆயுத மோதல் தவிர்ந்த ஏனைய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, அரசியல் குழப்பங்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளவர்களுக்கு எதிராக தமது உரிமைகளை மீள நிறுவுவதற்கு எந்தவொரு வாய்ப்புகளும் மேற்படி சட்டத்தில் இல்லை.

மேலும், ‘பெர்மிட்’ (அனுமதிப் பத்திரக்) காணிகள் பல வருடங்களாக, எவ்விதமான அபிவிருத்திகளும் அற்ற வகையில், கைவிடப்பட்டுள்ள நிலையில், அத்தகைய காணிகளை அபிவிருத்தி செய்து கொண்டும், பராமரித்துக் கொண்டும் பல வருடங்களாக குடியேறியிருக்கின்ற மக்களுக்கு, அக் காணிகள் தொடர்பிலான உரித்துகளை ஏற்கனவே கைவிட்டுச் சென்றவர்களால் கோரப்படுகின்ற நிலையில், மாற்றுக் காணிகளை வழங்குவதற்கும், அம்மக்கள் அதுவரைக் காலம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென நட்ட ஈடுகள் வழங்குவதற்குமான ஏற்பாடுகளும் தேவை. மாற்றுக் காணிகளை வழங்குகின்ற நிலையில், அவர்களுக்கான வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் முழுமையான உதவிகள் தேவை.

மேலும், வடக்கு மாகாணத்தைப் பொறுததவரையில் காணிக் கச்சேரிகளை மாவட்டங்கள் தோறும் நடத்த வேண்டியது அவசியமாகும். எனவே, இத்தகைய நிலைமைகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும்.

அந்த வகையில் மேற்படி அனைத்து விடயங்களையும் கொண்டதான, எமது மக்களின் காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளுடனான அரச காணிக் கொள்கை ஒன்றின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், தற்போது பாவனைகளின்றி, கைவிடப்பட்டிருக்கும் காணிகளைப் பெற்று, அவற்றைப் பொருளாதார வளமிக்க வகையில் பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தினை நான் வரவேற்பதுடன், அதனை உடனடியாக செயல்படுத்தவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-6 copy

Related posts:

வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
நீர்கொழும்பு முன்னக்கர விவகாரத்திற்கு விரைவில் நியாயமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்ப...
தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!