தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, August 12th, 2023

தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்தவர்களுள் ஒருவன் என்ற அடிப்படையில், தற்போது உருவாகியுள்ள சூழலை முன்னகர்த்துவதற்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய நாடாளுமன்ற உரை மற்றும் அதுதொடர்பாக பல்வேறு தமிழ் தரப்புக்களும் வெளியிட்டு வருகின்ற வியாக்கியானங்கள் தொடர்பாக இன்று(12.08.2023) கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தூள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் அதனை செழுமைப்படுத்துவதற்கான சில பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தூள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது எமது அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயம். தமிழ் தரப்புக்களின் தவறான அணுகுமுறை காரணமாகவே இதனை ஜனாதிபதி மீண்டும் நாடாளுமன்றிற்கு கொண்டு வந்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் உருவாக்கம் மற்றும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டமை போன்றவை சாதாரணமாக நிகழ்ந்ததவை அல்ல.

தமிழ் மக்கள் மத்தியில் உருவாகிய ஆயுத ரீதியான விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் பங்கு இருக்கின்றது.

ஆயுதப் போராட்ட அமைப்புக்களில் தம்மை இணைத்துக் கொண்ட ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புகளின் பயனாக உருவாகியதே இந்த 13 ஆவது திருத்தச் சட்டம். இதில் எமது மக்களுக்கு இருக்கின்ற தார்மீக உரிமையயும் பறந்தள்ளி விடமுடியாது.

ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவனாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முக்கியத்துவத்தினையும் அதன் பெறுமதியையும் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அதேபோன்று, ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்து தம்மை அர்ப்பணித்தவர்களும், ஆயுதப் போராட்டாத்திற்கான ஆத்மார்த்தமான ஆதரவை வழங்கியவர்களும் இதனை புரிந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இப்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான நம்பிக்கையீனங்களை வெளியிடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் ஒட்டுண்ணிகளாகவே இருக்கின்றனர்.

அதாவது, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்காக எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காது, நெருக்கடியான கால கட்டங்களில் பாதூகாப்பான சுயவாழ்வியலை உறுதிப்படுத்தியவர்களாகவும், அவ்வாறானவர்களின் வாரிசுகளாகவுமே இருக்கின்றனர்.

இப்போது நாடாளுமன்றத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றவர்களை எடுத்துக் கொண்டால்கூட, என்னை தவிர நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களாக இருக்கின்றனர். ஏனையவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம், மற்றும் அந்தப் போராட்டம் இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு பின்னர் தவறான திசையில் முன்னெடுக்கப்பட்டதால் ஏற்பட்ட அவலங்கள் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் ஒட்டுண்ணிகளாகவே இருக்கி்றனர்.

இவ்வாறான அரசியல் ஒட்டுண்ணிகளே, தற்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவது தொடர்பாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், தமது சுயலாப அரசியலுக்காக நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், வரலாற்று தவறு ஒன்றினை இன்னுமொருமுறை செய்யாது, கிடைத்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைளை வென்றெடுப்பதற்கு அனைவரும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related posts:


கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது – மன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவத...
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச...