கள் இறக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தடையை உடன் அகற்ற வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
Friday, May 25th, 2018
பனை மூலமான கள் உற்பத்தி தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியானது எமது மக்களுக்கு மிகவும் வேதனையைத் தருவதாகவே இருக்கின்றது. அந்தவகையில் குறித்த தொழில் சார் மக்களுக்கு பாதகமாக உள்ள இந்த வர்த்தமானியின் நோக்கம் என்ன? என்பதுவே பலருக்கும் புரியாமல் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை, 2016ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு பிரேரணைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கித்துள் மரத்தைத் தவிர, கள்ளை உற்பத்தி செய்யும் மரம் எதிலும் கள் இறக்கப் படுதலாகாது என்றும், கித்துள் மரத்தைத் தவிர, வேறு ஏதேனும் மரத்திலிருந்து கள் எடுக்கப்படுதல் அல்லது கீழிறக்கப்படுதல் ஆகாது என்றும் இந்த வர்த்தமானி தெரிவிக்கின்றது. இது, எமது மக்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்கி இருப்பதை நான் ஏற்கனவே பல தடவைகள் இந்தச் சபையிலே எடுத்துக் கூறியிருக்கின்றேன். அதுமட்டுமல்லாது, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினதும், கௌரவ பிரதமர் அவர்களினதும் அவதானங்களுக்கும் கொண்டு வந்துள்ளேன்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில், பனை மற்றும் தென்னை மரங்களே பிரதான கள் உற்பத்தி மரங்களாகக் காணப்படுகின்றன. கித்துள் மரம் என்பது ஒரு காலத்தில் தென் பகுதி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் கள் இறக்குவதற்குத் தடை செய்யப்பட்ட மரமாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளது.
நான் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், கித்துள் சார்ந்த தொழிற்துறையும் எனது அமைச்சின் கீழ் இருந்ததன் காரணத்தினால், கித்துள் பாணி மற்றும் கருப்பட்டி உற்பத்தித்துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, கித்துள் மரங்களில் சீவல் தொழிலில் ஈடுபடுகின்றவர்களை காவல்த்துறையினர் கைது செய்வதாக அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்த நிலையில், உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி, அத் தடையினை நாம் நீக்கி இருந்தோம்.
தற்போதைய நிலையில்கூட கித்துள் சார்ந்த கள் உற்பத்திகள் இந்த நாட்டில் எந்தளவிற்கு பெருமளவில் முன்னெடுக்கப்படுகின்றன? என்பது கேள்விக்குரிய விடயமாக இருப்பதாக எண்ணக்கூடிய நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


