கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – அமைச்சர் தேவானந்தா உறுதியளிப்பு!

Thursday, May 27th, 2021

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா  மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய  இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு  பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது.

அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி  நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள  சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய  பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில்,  அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று  தெரிவித்துள்ளார்

Related posts:

பளை - காங்கேசன்துறை இடையிலான நகரப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வ...
வன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்ப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த வடமேல் மாகாண “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்...