கடலட்டைப் பண்ணைகள் சிறுதொழிலாளர்களுக்கு இடையூறாக அமையாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Sunday, May 23rd, 2021

பாரம்பரியமான தொழில் முறைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சிறு தொழிலாளர்களைப் பாதிக்காத வகையிலேயே கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ். கடல் நீரேரியில் சிறுதொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களின் பிரதிநிகளுடன் இன்று(23.05.2021) அமைச்சரின் யாழ் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்குறிப்பிடப்பட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாரம்பரிய தொழில் முறையில் ஆர்வம் செலுத்துவோரின் கருத்துக்களை கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை தெளிவுபடுத்தினார்.

அதேவேளை பாரம்பரிய தொழில்முறைகளை தொடர விரும்புகின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் வழங்கினார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய பொருளாதார நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு கடற்றொழிலாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக, கடலட்டைப் பண்ணைகளை உருவாக்குவதற்கு கடற்றொழிலாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால், பல்வேறு பகுதிகளிலும் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாழ் கடல் நீரேரிப் பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு நூற்றுக்கணக்கான உள்ளூர் கடற்றொழிலாளர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதோடு, ஒரு பகுதியினர் பண்ணை அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி சிறுதொழில்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு விரும்புகின்ற ஒரு பகுதியினர், தமது தொழில் முறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி. மாநகர சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில், கடற்றொழில் அமைச்சருடனான இன்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: