கச்சத்தீவு திருவிழா – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் திமுகாவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தொலைபேசியில் கலந்துரையாடல்!
Tuesday, February 8th, 2022
கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது தொடர்பாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியது மூத்த திமுக தலைவர் என்று மட்டும் பூடகமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இத்திருவிழாவில் ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பர். இருநாட்டு தமிழர்களின் உறவையும் வலுப்படுத்தும் வகையில் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவித்தது இலங்கை அரசு. இது தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். மேலும் இக்கடிதத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேரில் கொடுத்தார்.
அப்போது இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இது குறித்து பேசுவதாகவும் ஜெய்சங்கர் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு செய்தியை கொடுத்திருந்தார். அதில், திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக தம்மிடம் பேசியதாகவும் அப்போது கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சன் நியூஸில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தாமே பேசியதாகவும் கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத் தமிழர்களை அனுமதிக்க கோரியதாகவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கொடுத்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம் பேசியதாவும் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


