எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்த வேண்டியது அவசியம் –  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 30th, 2016

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்ற தனியார்துறை தொழிலாளர்களில் 81 சத வீதமானோர் தமக்கென தொழில் ரீதியாக எழுத்து மூலத்திலான ஒப்பந்தங்கள் எதனையும் கொண்டிராத நிலையே காணப்படுகின்றது.

அதே போன்று, கூட்டுப் பேரம் பேசலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் கொண்டிராத நிலையிலேயே அவர்கள் காணப்படுகின்றனர். இந்தத் தொழிலாளர்களில் 85 வீதமானவர்கள் சட்ட ரீதியான ஆகக் குறைந்த ஊதியம் தொடர்பில் விழிப்பற்ற நிலையிலேயே இருந்து வருகின்றனர்.  இத் தொழிலாளர்களில் பலரும் மாதமொன்றுக்கு ஆகக் குறைந்த ஊதியமாக 10,000 ரூபா பெறக்கூடிய நிலையிலேயே இருந்து வருவதை இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இந்த வகையில் பார்க்கின்றபோது, இவ்வாறான ஊதிய பாரபட்சங்கள் மூலம் பெண்கள் பிரதிகூலங்களை அடைகின்ற நிலையும் காணப்படுகின்றது. அதே நேரம், எமது பகுதிகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலை செய்கின்ற இடங்களில் பால் சமத்துவமின்மைக்கு அதிகம் அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற நிலையும் காணப்படுகின்றது.

அதாவது, இந்தப் பெண் தொழிலாளர்களுக்கான தொழில் நிபந்தனைகள், மிக மோசமானதாகவும், சட்ட ரீதியான உரிமைகள் பலவீனமானதாகவும், அவை அனைத்துலகத் தொழிலாளர் நியமத்திற்கு ஏற்புடையதாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ஆண்களுக்கு அதிகமான ஊதியத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளில் பெண்களை அமர்த்தி, அவர்களுக்கு மிகவும் சொற்பமான ஒரு தொகை ஊதியத்தை வழங்கும் போக்கு வடக்கிலே பெரும்பாலாகக் காணப்படுகின்ற ஒரு நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.அந்த வகையில் மிக அண்மையில் இத் தொழிலாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, இத் தொழிலாளர்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மேல் பணியாற்றுவதாகவும், மேலதிக நேரப் பணிகளில் அதிகமான பெண்களே ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றன சட்டத்தின் மூலம் பல நாடுகளில் உறுதிப்படுத்தப்படுகின்ற நிலையில், எமது நாட்டில் தனியார்துறைத் தொழிலாளர்கள் தொடர்பில் அந்த ஏற்பாடுகள் காணக்கூடியதாக இல்லை என்றே கூற வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றால் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் இலங்கையில் நிர்ணயிக்கப்படுகின்ற நிலையில், வடக்கைப் பொறுத்த வரையில் இந்த இரண்டு சலுகைகளும் இல்லாத நிலையில் சுமார் 80 வீதமான தொழிலாளர்கள்  பணியாற்றி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

வடக்கிலே காணப்படுகின்ற இத்தகைய நிலையானது, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அதன் மூலமாகத் தமது எதிர்காலத்தை நிலைபெறச் செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்ற எமது தொழிலாளர்கள் மத்தியி;ல் மிகவும் ஆபத்தான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது என்றே கூற வேண்டும்.

அந்த வகையில், இலங்கையில்  எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கில் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டிய ஒரு தேவையும், கட்டாயமும் இருக்கின்றது என்பதை கௌரவ அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்களது அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். மேற்படி சட்டத்தை அமுல்படுத்தவதில் நாடளாவிய ரீதியில் சிக்கல்கள் இல்லாமலுமில்லை என்கின்ற போதிலும், வடக்கைப் பொறுத்த வரையில் இது அத்தியவசியமாகத் தேவைப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் செயற்படுகின்ற தொழிற்சங்கங்கள் தமது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றம் வரை சென்று சட்டத்தை உறுதிப்படுத்தியும், இதற்கான பரிகாரங்களை எட்டியும் வருகின்றன.

ஆனால், தபால்ச் சேவை, தொலைத் தொடர்புகள் சேவை, சுகாதாரச் சேவை போன்றவற்றுக்கான தொழிற்சங்கங்கள் இலங்கை முழுவதிலுமாகச் செயற்படுகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் இவ்வாறான சங்கங்கள் செயற்பாடுகளற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.

எனவே, தேசிய மற்றும் அனைத்துலக தொழில் நியமங்கள் செயற்படுவதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உறுதி செய்வதற்கும்,அது தொடர்பில் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும்,மேலும், கடந்தகால யுத்தம் காரணமாகச் சிதைவடைந்துள்ள தொழிற் சங்கங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவை வழங்கவும்,

வடக்கு, கிழக்கு மாகாண தொழிலாளர்களுடன் வினைத்திறன்மிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும்,அனைத்துலகத் தொழிலாளர் நிறுவகத்தின் நியமங்களை ஏற்று, செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கும்,

அடிப்படை, குறைந்த பட்ச வாழ்வாதார நியமங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான தொழிற்படு நிகழ்சி நிரல் ஒன்றை உருவாக்குவதற்கும்,

குறிப்பாக, உள்ளூர் பணிப் பெண்களுக்கான பணியை ஒரு தொழிற்துறையாக மாற்றுவதற்கும், வடக்கு மாகாணத்தில் வேலைத் தளங்களில் தொழிற்சங்கமொன்றை நிறுவுவதற்கு குறைந்தபட்சமாக 5,000 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு, சில அரச நிறுவனங்களால் அத் தொழிற்சங்க முயற்சிகள் நிராகரிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

05

Related posts: