‘எழுக தமிழ்’ கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழமையுடனான அழைப்பு!

Wednesday, September 21st, 2016

தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகளை வென்றெடுக்க, ஒருமித்த குரலுக்கு உரம் கொடுத்து பலம்சேர்க்க “எழுக தமிழ்” கூட்டுப்பேரணியில் பங்கேற்க உணர்வெழுச்சியோடு அனைத்து மக்களும் அணிதிரண்டு வருமாறு அறைகூவல் விடுக்கிறோம்  என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள “எழுக தமிழ்” கூட்டுப்போரணி தொடர்பாக  ஈழமக்கள் ஜனநாயக கட்சிய விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

எமக்கென்று ஓர் இலட்சியக்கனவுண்டு. அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுப்பதேயாகும். அதற்காக நாம் குரல் எழுப்ப வேண்டிய தருணங்களில் குரல் எழுப்பியும், செயலாற்ற வேண்டிய சூழலில் செயலாற்றியும் அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு இடையறாது உழைத்து வந்திருக்கின்றோம்.

நாம் வகுத்துக்கொண்ட அரசியல் வழிமுறையின் ஊடாக, எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு எமது மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வு காண்பதிலும் வெற்றி கண்டிருக்கிறோம். ஆனாலும் எமது மக்களின் ஆழ்மனங்களில் இருந்து எழுந்து வரும் உணர்வுகளை எமது இலட்சியக்கனவுகளாக ஏற்றிருக்கும் நாம் எமது மக்களின்  அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்காத வரை ஒருபோதும் ஓயப்போவதில்லை.

தமிழ் தேசிய இனத்தின் உணர்வுகள் எல்லாமே ஒன்றுதான். எமது மக்கள் எழுப்பும் நீதியான உரிமைக் குரலும் ஒன்றுதான். ஆனாலும் எமது மக்கள் ஆதரிக்கும் கட்சிகளும், அவற்றின் அணுகுமுறைகளும் வெவ்வேறானவை. எரியும் பிரச்சினைகள் மீது நீரூற்றி நெருப்பை நிரந்தரமாக அணைக்கவே நாம் விரும்புகிறோம்.

மாறாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதை பூதாகரமாக வளர்ப்பவர்கள் நாமல்ல. சக தமிழ் அரசியல் கட்சிகளின்  வழிமுறைகளிலிருந்து நாம் எமது யதார்த்த அரசியல் வழிமுறையில் வேறுபட்டு நின்றாலும், எமது மக்களின் தேசிய அரசியல் உணர்வுகளின் நலன்களில் நின்று பொது உடன்பாட்டுத்தளத்தில் இணைந்து செயலாற்ற நாம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை.

உணர்வுகளால் ஒன்றுபட்ட எமது மக்களை அரசியல் முரண்பாடுகளாலும், வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளாலும் பிரித்து வைத்திருப்பதில் நியாயமில்லை. தேர்தலுக்காக மட்டுமன்றி எமது மக்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கிலும் தமிழ்க்கட்சிகள் ஒருமித்து குரல் கொடுப்பதையே நாம் விரும்புகிறோம்.

கடந்தகால வரலாற்று அனுபவங்கள்  அர்த்தமுள்ள படிப்பினைகளை  எமது மக்களுக்க தந்திருக்கின்றன. அழிவுகளில் இருந்து விடுபட்டு அரசியல் உரிமை பெற்று மீண்டெழும் அரிய வாய்ப்புகளை சக தமிழ்க்கட்சி தலைமைகள் பலவும் கடந்த காலங்களில் தவறவிட்டிருக்கின்றன.

அதுபோலவே இன்றும் அவ்வாறானதொரு அரசியல் சூழல் கனிந்து வந்திருக்கிறது. இதனைப் பயன்படுத்தி எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வாய்ப்பு புதிய அரசில், அரசியல் பலத்தோடு இணைந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே உண்டு. ஆனாலும் எமது மக்களின் பிரச்சினைகள் எதுவும் இன்னமும் தீரவில்லை.

மாகாண சபைகளுக்கு கிடைத்திருக்கும் அதிகாரங்கள் எமது மக்களுக்கான முழுமையான தீர்வு அல்ல. ஆனாலும் கிடைத்த அதிகாரங்களை கூட பயன்படுத்த விரும்பாமல், மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதி கூட மக்களுக்கோ, அபிவிருத்திக்கோ உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்கு திரும்பி போகும் நிலையில் வட மாகாணசபை தூங்கிக்கிடக்கின்றது. ஆகவே எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் எழுப்பப்படும் கோசங்கள் யாரை நோக்கியது என்று எமது மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

மத்திய அரசை நோக்கியா? அல்லது அரசியல் பலத்தோடு புதிய அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டு எதையும் சாதிக்க விரும்பாமல் இருக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பையா? அல்லது தமிழரசுக்கட்சியை நோக்கியா? அல்லது கிடைத்த அதிகாரங்களையே பயன்படுத்தத் தவறிவரும் வட மாகாணசபையை நோக்கியா?

இந்த கேள்விகளுக்கு எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு எமது மக்களை அணிதிரண்டு வருமாறு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். எமது மக்களுக்கு சரியான திசைவழியை காட்டிட, சரியான திசை வழி நோக்கி நடக்கும் பாதை எதுவென வகுத்திட, எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் அலை கடலென அணிதிரள்வோம்.

கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு எமது மக்களை வழி நடத்திச் செல்லும் புதியதொரு வரலாற்றை படைக்கும் முன்னெடுப்பாக எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிபெறச் செய்வோம். எமது உரிமைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்க மக்களே அணிதிரண்டு வாருங்கள்! எங்கள் நிலத்தில்…. மக்கள் பலத்தில்,… எழுச்சி கொள்வோம்!….உரிமை வெல்வோம்!! என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Poster Front

Poster Back

Poster

Related posts:

மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
தயக்கமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு தயார் - அமைச்சர்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு - அம...

எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன - டக்ளஸ் தேவானந்தா!
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் பொதுப் பவனைக்கு வரும் – அமைச்சர் டக்ளஸ் ...
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது - அமைச்சர் டக்ளஸிற்கு காணி ...