அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, August 26th, 2019

நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்று கோருகின்றோமோ அந்த வேட்பாளரை மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றிபெற செய்வார்களேயானால் நான் தமிழ் மக்களின் அதிகளவான பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வுகளை பெற்று ஒரு நிரந்தரமான வாழ்வியல் சூழலை உருவாக்கி காட்டுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி கடந்த காலங்களில் செய்த மக்கள் பணிகள் தொடர்பில் யாருக்கும் நாம் மீட்டிக்காட்ட தேவையில்லை. ஆனாலும் போலித் தேசியவாதிகளின் ஏமாற்று வலைக்குள் எமது மக்கள் வீழ்த்தப்படுவதால் எமது கட்சியின் வாக்குப் பலம் ஒரு குறிப்பிட்ட அளவாக இருந்து வந்திருக்கின்றது.

ஆனால் இம்முறை அந்த ஏமாற்றுக் காரரின் வலைக்குள் எமது மக்கள் வீழ்ந்து விடமாட்டார்கள் என்று நம்புகின்றேன். கடந்தகாலத்தில் நான் தூர நோக்குடன் முன்வைத்த விடயங்கள் தான் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது கடந்த கால வரலாறுகளையும் அதனூடாக எமது மக்கள் கண்டுகொண்ட துன்ப துயரங்களையும் நேரில் கண்டுகொண்டவர்கள் நாம்.

அந்த வகையில் எமது மக்கள் நிரந்தரமான நீரவை எட்டி அதனூடாக ஒரு அமைதியான வாழ்வியலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்துவருகின்றது.

கடந்த காலத்தில் நாம் போதிய அளவு அரசியல் பலமின்றி யுத்தம் நடத்திக்கொண்டிருந்த அரசுகளின் அமைச்சரவையில் இருந்துதான் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தேன்.

ஆனால் ஆட்சி அதிகாரங்களை தீர்வுகளை பெற்றுத்தருவேம் என்று கூறி அபகரித்தவர்கள் தமது அடுத்த சந்ததியினருக்கான தீர்வுகளை பெற்றுக்கொண்டுள்ளனரே தவிர தமிழ் மக்களுக்கான எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் எமது மக்களின் தேவைப்பாடுகளுக்கு தீர்வுகளை கண்டுகொடுக்கமுடியும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. அந்தவகையில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்று கோருகின்றோமோ அந்த வேட்பாளரை மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதற்கான அரசியல் பலத்தை எமது மக்கள் எனக்கு வழங்குவார்களேயானால் வரவுள்ள ஆட்சி காலத்தில் நிச்சயமாக நாம் எமது மக்கள் எதிர்கொண்டுவரும் தீரா பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்போம். அதற்கான ஆளுமையும் தன்னம்பிக்கையும் எம்மிடம் உண்டு என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: