எமது ஆளுமையும் அனுபவமுமே 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொடுத்தது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, August 8th, 2018

கடந்த காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் எமது முயற்சி காரணமாக கைகூடியிருந்த நிலையில், அதனை ஒழுங்குற செயற்படத்தக்கூடிய விருப்பம், ஆளுமை, திறமை என்பன எம்மிடம் இருந்தன. இன்றைய எமது பகுதிகளில் அத்தகைய நிலைமைகள் காணக்கூடியதாக இல்லாததன் காரணமாகவே, எமது மக்களுக்கான அனைத்து திட்டங்களும் பெயரளவில் வந்தும், செயற்பாடுகளுக்கு எட்டாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மனமிருந்தால், இடமிருக்கும் என்பதையே இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இணை மனை சொத்தாண்மை விசேட ஏற்பாடு  சட்டமூலம்  நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அந்த வகையில், கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள், அவரது தந்தையாரான அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி தற்போது மாதிரிக் கிராமங்களை அமைக்கும் திட்டத்தினை தொடர்ந்து வருகின்றார். இத்திட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் நோக்கி – செல்வபுரம், தட்சணாபுரம், கைலாயபுரம், லூர்து நகர் என்ற வகையில் வருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க முயற்சியாகவே இருக்கின்றது. அந்த வகையில் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், வீடில்லாப் பிரச்சினைகள் மிக அதிகம் காணப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய திட்டங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றேன்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரமேதாச அவர்களது எண்ணக் கருவுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் 300 வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்டமும் கடந்த கால யத்தம் காரணமாக மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டும், அழிந்தும் போயிருந்த நிலையில், நான் அமைச்சராக இருந்த காலத்தில் அதனைப் பொறுப்பேற்று, அந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகளை மேற்கொண்டு, மேற்படி வீட்டுத் திட்ட வீடுகளைக் கைவிட்டு ஒரு சாரார் சென்றிருந்த நிலையில், அக் காலகட்டத்தில் காணி, வீடுகளற்ற நிலையில் மீளக் குடியேற வந்திருந்த குடும்பங்கள் அங்கே குடியமர்த்தப்பட்டன.

மேற்படி வீடமைப்புத் திட்டம் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரிய எஞ்சிய காணியில், கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மிகவும் பாதிக்கப்பட்டிருந்த காணி, வீடுகளற்ற சுமார் 100 வரையிலான குடும்பங்கள் வீடுகளை அமைத்து குடியேறியிருந்தன. மேலும், இதே காணியில் சிங்கள மக்களும் குடியேறியுள்ள நிலையில், விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் நிலை கொண்டுள்ளதுடன், அவர்களுக்கென ஒரு பௌத்த விஹாரையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி 100 குடும்பங்களில் 65 குடும்பங்கள் அத்துமீறி அங்கே குடியிருப்பதாகக் கூறப்பட்டு, தேசிய வீடமைப்பு அதிகார சபையானது சாவகச்சேரி நீதிமன்றத்திலே தனித்தனியான வழக்குகளை மேற்படி 65 குடும்பங்களுக்கும் எதிராக கடந்த மாதம் 03ஆம் திகதி தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் நான் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் உரிய அவதானத்தினைச் செலுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் மேற்படி குடும்பங்களுக்கு அதே இடத்தில் காணியும், வீட்டுத் திட்டமும் வழங்குவதற்கு ஒரு விசேட ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: