எமது அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, July 13th, 2016

நவாலி தேவாலயம் மற்றும் சின்னக்கடை யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப்போய் இருபத்தியொரு ஆண்டுகளாகின்றன.

1995ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல்களில் விமானம் குண்டுகளை வீசியதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அப்பாவி மக்கள் பலியாகிப் போனதுடன் தேவாலயங்களும் சேதமாகின. இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு எவ்வாறான சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அது இரண்டு கருத்துக்கு இடமில்லாமல் கண்டனத்துக்குரியதாகும். எனது நிலைப்பாடு அன்றும் இதுவாகத்தான் இருந்தது. அன்றும் வெளிப்படையாகவே எனது கருத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது –

தேவாலயத் தாக்குதல்களையும், உயர்பாதுகாப்பு வலயங்களுக்காக பெருமளவு எமது மக்களின் காணி, நிலங்களை அரசு அபகரிக்க முற்பட்டதையும்,எமது மக்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் இருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் குடிசன மதிப்பீட்டுப்பணியை மேற்கொள்ள அரசு எடுத்த முயற்சியையும் நாடாளுமன்றத்தில் ஒன்பது உறுப்புரிமையைக் கொண்டிருந்த ஈ.பி.டி.பியாகிய நாம் எதிர்த்தும், கண்டித்தும் குரல் கொடுத்ததுடன், நாடாளுமன்றத்தை ஒரு மாதகாலம் பகிஸ்கரிக்கவும் செய்திருந்தோம்.

நவாலி தேவாலயம் மீதான தாக்குதலுக்கும், யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதலுக்கும் யார்?தூண்டுதலாக இருந்தார்கள் என்பதை பலர் அறிந்திருந்தபோதும் அப்போது வெளியில் கூறவில்லை.படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய புலிகளை பின்தொடர்ந்த தாக்குதல் விமானமே புலிகள் நவாலி தேவாலய வளாகத்திற்குள் நுழைந்தபோது தாக்குதலை நடத்தின.

13699987_1561440220819070_5553506740424784848_n

அதுபோலவே படையினரைத் தாக்கிவிட்டு ஓடி வந்த புலிகள் யாகப்பர் தேவாலய வளாகத்திற்குள் நுழைந்தபோதும் அங்கும் விமானத் தாக்குதல் இடம்பெற்றது.யாகப்பர் தேவாலய வளாகத்திற்குள் புலிகள் பதுங்கு குழிகளை அமைத்திருந்ததும் பின்னர் தெரியவந்தது.

நான் அடிக்கடி கூறுவதுபோல் களவு எடுப்பதும் தவறு, கவனயீனமாக இருந்து களவு கொடுப்பதும் தவறு அதுபோலவே, தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியிருந்தமையும் தவறு, அவ்வாறு தாக்குதல்கள் நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய புலிகளின் செயற்பாடும் தவறு.

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக இயக்கங்களை ஆரம்பித்து விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த முதன்மையானவர்களில் நானும் ஒருவன் என்றவகையில்,இலங்கை இந்திய ஒப்பந்தம்வரை தாயகத்தில், போராட்ட காலத்தில் நடைபெற்ற நன்மையிலும், தீமையிலும் எனக்கு இருக்கக்கூடிய தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் என்று நான் பல தடவைகள் கூறிவந்திருக்கின்றேன்.

அதற்காக அப்பாவி மக்களை வணக்கஸ்தலங்களில் பலி கொடுத்ததற்கும், மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளிருந்து படையினரை தாக்குவதையும், அதற்கு பதிலடியாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி படையினர் தாக்கியிருந்ததையும் நான் கண்டித்திருக்கின்றேன்.

13626509_1561440300819062_7939745480674452763_n

எனது விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றேன். அவ்வாறான தாக்குதல்களுக்கு நான் எவ்வாறு தார்மீகப் பொறுப்பேற்க முடியும். அரசியல் கொலைகளையும், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களையும், உள்ளியக்கக் கொலைகளையும், சக இயக்கங்களுக்குள் நடைபெற்ற சகோதரப் படுகொலைகளையும் விடுதலைப் போராட்டமாக நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் முன்மாதிரியாகவே எனது போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். இந்த விடயத்தில் யாரும் என்னுடன் தர்க்கிக்க முடியாது. உண்மைக்குப் புறம்பாக பேசுகின்றவர்கள் தூக்கத்தில் இருப்பவனைப்போல் நடித்தால் அத்தகையவர்களை விழிக்கச் செய்வது கடினமாகத்தான் இருக்கும்.

இன்றைய தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளிடையே ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து வழிநடத்தியவன் என்பதுடன், காலமாற்றத்தைத் தொடர்ந்து ஜனநாயக வழியிலான அரசியல் போராட்டத்தை தொடர்ந்தும் நான் நடத்திக் கொண்டிருப்பதற்கும் காரணம், எமது மக்களைப் பாதுகாத்துக் கொண்டும்,

அவர்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது எனும் இலக்கு நோக்கி முன்னேறுவதற்குமான வேலைத்திட்டத்தையே எனது தார்மீகப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு பொறுப்புணர்வோடு செயற்பட்டுவருகின்றேன். தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டு ஜனநாயக வழிமுறையில் களத்தில் இறங்கியபோது எனது நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிமுறையானது எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதும்,

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எமது மக்களை கரைசேர்த்து விடுவதும்தான். எமது மக்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் பலியாகிப்போக விடாமல் பாதுகாப்பதும்தான். எமது மாற்று வழியையும், அணுகுமுறைகளையும் நோக்கி பாரிய அளவில் மக்கள் அணிதிரண்டு வருவதைக்கண்டு அஞ்சியவர்களும், மக்களுக்கு அழிவுப்பாதையைக் காட்டியவர்களும் காலத்துக்குக்காலம் எம்மை துரோகிகள் என்றும், கொலைகாரர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் தூற்றினார்கள், எம்மீது அவதூறும் பரப்பினார்கள்.

எம்மீது அவதூறு பரப்பியவர்களும், தூற்றியவர்களும் யார்? என்று பார்த்தால் அவர்கள் ஆயுத வழிமுறையில் வந்தவர்களாக இருந்தாலும், அரசியல் வழிமுறையில் வந்திருந்தாலும் அவர்களே எமது மக்களை அழிவுகளுக்குள் தள்ளிவிட்டவர்களாகவும், பாதாளம் நோக்கி எமது மக்களை வழி நடத்தியவர்களாகவும், உளவுப் பிரிவுகளுடனும், அரச படைகளுடனும் சேர்ந்து இனத்துரோகமும், சகோதரத்துரோகமும் செய்தவர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள்.

13700164_1561440260819066_3610210030841681535_n

இவர்கள் காட்டிய வழிமுறையே தமிழ் மக்களை பெரும் அழிவுகளுக்குள் தள்ளிவிட்டுள்ளது. எம்மை தூற்றியவர்கள் எழுந்தமானமாகவும், அரசியல் காழ்ப்புணர்வோடுமே அதைக் கூறினார்களே தவிர, இன்றுவரை எந்தக் குற்றச்சாட்டுக்களையும் அவர்களால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை.

ஏனெனில் எமது கொள்கைக்கு மாறாக நாம் எந்தக் குற்றங்களையும் செய்தவர்களுமில்லை. குற்றங்களைச் செய்வதற்கு நான் யாருக்கும் துணைபோகவுமில்லை. எமது முதுகில் காயங்களில்லை ஆகையால் காட்டு வழிப்பாதையில் நுழைவதற்கு எங்களுக்கு அச்சமுமில்லை.

ஆகையால்தான் போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் எமது மக்கள் நலப்பணிகளை முழு முயற்சியோடு முன்னெடுத்துச் செல்வதே என் பணி என்று அதற்காகவே என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளை சரியாக அறியாமலும், தூண்டுதலிலும், அரசியல் காழ்ப்புணர்விலும் கூறியதைப்போல் கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், எமது கொள்கைகளாக ஒருபோதும் இருக்கவில்லை. மாறாக அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதும், மக்களை பாதுகாப்பதும், துயரத்திலும், அவலத்திலும் அகப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்பதும், அழிந்த எமது தாயகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவதுமே எமது கொள்கையாகவும், வேலைத்திட்டமாகவும் இருந்து வருகின்றது.

அதனால்தான் புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களிடம் ‘உங்கள் வேலை வாய்ப்புக்களையும், தேவைகளையும், பிரச்சினைகளையும் ஈ.பி.டி.பியிடம் சென்று பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது தீர்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் தருவதையெல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாக்குகளை மட்டும் அவர்களுக்குப் போடாதீர்கள்’ என்று வெளிப்படையாக கூறுமளவுக்கு நாம் மக்களுக்கு தேவையானவர்களாக சேவையாற்றியிருக்கின்றோம்.

நான் எடுத்துக்கொண்ட அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.

Related posts: