எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமியில் நித்திய சமாதானமும் நீடித்த மகிழ்ச்சியும் நிலவட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 24th, 2016

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி.. எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம்.எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும், எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும் நீடித்து நிலவ வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது

உலகத்தின் ஒளியாக, மானுட சமூகத்தின் சமாதான விழியாக,  கருணை மைந்தன் ஜேசு பாலன் பிறப்பெடுத்து வந்த நத்தார் தினத்தை உலகெங்கும் வாழும் மக்களோடு இணைந்து  எமது மக்களும் நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். இந்த நத்தார் தினத்தை எமது மக்களோடு இணைந்து நாமும் மகிழ்ச்சியோடு வரவேற்போம்

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி.. எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம்.எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும், எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும் நீடித்து நிலவ வேண்டும்.

உங்களது  நியாயமான உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்குக்கும் நாம் என்றும் மதிப்பளிப்பவர்கள்.  அதற்காகவே நாம் என்றும் பரிசுத்தமாக உழைத்து வருகின்றோம். ஆகவேதான் இடையறாது உங்களுடனேயே நான் இருந்து வருகின்றேன்.

இரத்தப்பபலிகளுக்கு  மத்தியிலும்,  துயரச்சிலுவைகளை  நீங்கள் சுமந்து நடந்த நாட்களிலும்,  மக்களாகிய உங்களுடனேயே நாமும் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

முட்களிலும் கற்பாறைகளிலும் நடந்து வதைத்துப்போன உங்கள் பாதங்களின் வலி தடவி,..
பசுந்தரையின் பாதை நோக்கி உங்களை அழைத்துவர  நாம் அயராது உழைத்து வந்திருக்கிறோம்.

ஒவ்வொரு நத்தார் தினத்தையும் நீங்கள் நம்பிக்கையோடு வரவேற்று கொண்டாடி மகிழும் போதும்,…

இனி வரும் காலம் நல்ல கனிதரும் காலம் என்ற நம்பிக்கைகளையே நாம் உங்கள் மத்தியில் விதைத்து வந்திருக்கிறோம். அந்த நம்பிக்கைகள் நிறைவேற நாம் உறுதியுடன் உழைப்போம்.

நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. அவை என்றும் தோற்பதில்லை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் எமது வழிமுறைகளும் ஒரு போதும் தோற்காது.

எமது தீர்க்கதரிசனங்களும், நம்பிக்கை தரும் சாத்தியமான எமது வழிமுறைகளுமே இன்று வெல்லப்பட்டு வருகின்றன.

நிரந்தர சமாதானம்,. நீடித்த சமவுரிமை,.. வரலாறெங்கும் துயரச்சுமைகளை சுமந்த எமது மக்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு,…. இவைகளே எமது மக்களின் ஆழ் மன விருப்பங்கள்.

ஆனாலும் எமது மக்களின் விருப்பங்கள் யாவும் வெறும் கற்பாறைகளில் மட்டும் விதைக்கபட்ட விதைகளாகவே இருந்து வந்திருக்கின்றன.

நிரந்தர சமாதானத்தை நோக்கிய எமது மக்களின் விருப்பங்கள் யாவும் நிறைவேறாத கனவுகளாக முடங்கிப்போயிருக்கின்றன.

சமாதானத்தை நேசிப்பவர்களாகிய எம்  மீது திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டாலும்  நியாயத்தீர்ப்பின் முன்பாக நாம்  நிரபராதிகளே.

சமாதானத்தை விரோதிப்பவர்கள் சாத்தான்களே. அவர்கள் உங்கள் உரிமை வாழ்வின் பெயரால் வேதம் ஓதுவார்கள். மறுபடி எமது மண்மீது இரத்த வடுக்களை சுமந்த வன்முறைக்கு தூபமிடுவார்கள்.

இரக்கமும் கருணையும் இல்லாத துயர வாழ்வொன்றை மறுபடியும் உங்கள் மீது திணிக்க விரும்புவார்கள்.

அவலங்கள் நடக்காத,.. அவலச்சாவுகளின் அழுகுரல்கள் கேட்காத,..  பஞ்சம்,. பசி,..பட்டினி இல்லாத,.. எமது சொந்த நிலங்களை இழந்து வாழும் துயர்கள் இல்லாத,.. எவரையும் எவரும் அடிமைகள் என்று கொள்ளாத புதியதொரு சமாதான இராட்சியத்தையே நாம் விரும்புகின்றோம்.

அதற்கு நாம் விசுவாசம் உள்ளவர்களாகவும்,.. நீதிச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும்,..   சமாதானத்தின் திசை நோக்கி சாத்தியமான வழிமுறையில் தொடர்ந்தும் நடப்போம்.

சமாதானத்தின் வடிவாக கருணை மைந்தன் யேசு பிரான் பிறந்த இத்தினத்தில்எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சமாதானமும் சமவுரிமையும் பூத்துக்குலுங்க உழைப்போம் என எமது பரிசுத்தமான மனதோடு நாம் உறுதி கொண்டு எழுவோம்.

அன்பும் கருணையும் அவனி முழுவதையும் ஆழட்டும்!மதிநுட்ப சிந்தனைகள் எமது மக்களை வழி நடத்தட்டும்!

ஒவ்வொரு குடி மக்களின் இல்லங்கள் தோறும் இருள் அகன்று
நிரந்தர ஒளி வீச இன்றைய நத்தார் தினத்தில் வாழ்த்துறேன்!

நன்றி!.

Website

Related posts:


நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...